International Women's Day 2023: ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ம் தேதி இன்று கொண்டாடப்படுகிறது. கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு மற்றும் குடும்பம் போன்றவற்றில் பெண்கள் அடைந்துள்ள வெற்றியை இந்த நாள் நினைவுபடுத்துகிறது.
உலகம் முழுவதும் மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 இன்று கொண்டாடப்படுகிறது. கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு மற்றும் குடும்பம் போன்றவற்றில் பெண்கள் அடைந்துள்ள வெற்றியை இந்த நாள் நினைவுபடுத்துகிறது. ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை மீட்டு தந்த நாள் இது என்றே குறிப்பிட வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் என்ன நடந்தது..?
18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். பெண்கள் என்றால் வீட்டு வேலைகளுக்கு மட்டுமே சரிவருவார்கள் என்று முடக்கிவைக்கப்பட்டார்கள்.பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது.
தொடர்ச்சியாக, 1857ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் ஆண்களுக்கு நிகராக பணியாற்ற பெண்களுக்கு வாய்ப்பு தரப்பட்டது.
பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி:
இருப்பினும், அவர்களின் ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதனால் பெண்கள் மிகுந்த கோவம் அடைந்தனர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி 1857ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி பெண்கள் ஒற்றுமையாக குரல் எழுப்பினர். அதன் பிறகு 1907ம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் போராடத் தொடங்கினர்.
இதன் தொடர்ச்சியாக, 1910-ம் ஆண்டு டென்மார்க் கோபன்ஹேகனில் மாபெரும் பெண்கள் உரிமை மாநாட்டை நடத்தினர். இந்த மாநாட்டில் உலக நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் ஆதரவு தெரிவித்தனர். தங்கள் உரிமைகளுக்காக பெண்கள் அனைவரும் கைகோர்த்து ஒற்றுமையாக நின்றனர்.
கிளாரே செர்கினே ஏன் முக்கியமானவர்..?
ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, பெண்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். இறுதியாக, பெண்கள் உரிமை மாநாடில் கலந்து கொண்டு மார்ச் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் தடைபட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு தினத்தில் மகளிர் தினத்தை கொண்டாடி வந்தன.

1920ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ரஷ்ய பெண் தொழிலாளர்களின் புரட்சியை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.
இதையடுத்து 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது. அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும், மகளிர் தினம் மார்ச் 8 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதை படித்து கொண்டிருக்கும் பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
