தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் தற்போது, நிவர் என்ற புயலும் உருவாகியுள்ளது. இது நாளை மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

புயல் காலங்களில் எச்சரிக்கை எண் கூண்டு ஏற்றப்படுவது வழக்கம். ஆனால் எதற்காக இந்த எண் கூண்டு, இதில் குறிப்பிடப்படும் எண்கள் எதைக் குறிக்கின்றன என்பதை பலரும் அறிந்ததில்லை. புயல் மையம் கொண்டதிலிருந்து அதி தீவிர புயலாக மாறுவது வரையிலான மாற்றங்களை மக்களுக்கு அறிவிக்க இந்த புயல்கூண்டு ஏற்றும் முறை பின்பற்றப்படுகிறது. இதில் மொத்தம் 11 வகையான புயல் கூண்டுகள் ஏற்றப்படும். ஒவ்வொரு எண் புயல் கூண்டும் ஓவ்வொரு நிலையை அறிவிப்பவை.

1ம் எண் எச்சரிக்கை கூண்டு, புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளது. பலமான காற்று வீசுகிறது. ஆனால் துறைமுகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உணர்த்தும். 

2ம் எண் எச்சரிக்கை கூண்டு, புயல் உருவாகியுள்ளது என்பதை அறிவிப்பதிற்காக ஏற்றப்படுவது தான் இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு. இதனைத் தொடர்ந்து துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் வெளியேற்ற வேண்டும் என்பதை தெரிவிக்க ஏற்றப்படுகிறது. 3ம் எண் எச்சரிக்கை கூண்டு என்பது திடீர் காற்று மற்றும் மழை உருவாகக் கூடிய சூழல் நிலவுகையில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும்.

4-ம் எண் எச்சரிக்கை கூண்டு, துறைமுகத்தில் மோசமான வானிலை ஏற்பட்டிருந்தால் அதனை அறிவிக்கும் வகையில் 4ம் எண் எச்சரிக்கை விடப்படும். துறைமுகத்தில் இருக்கும் கப்பல்களுக்கு ஆபத்து என்பதை தெரியப்படுத்த இது உதவும். 5ம் எண் எச்சரிக்கை கூண்டு, உருவான புயல் துறை முகத்தின் இடது பக்கமாக கரையைக் கடக்கும் என்பதை எச்சரிக்கை செய்ய இந்த கூண்டு ஏற்றப்படுவது வழக்கம்.

6ம் எண் எச்சரிக்கை கூண்டு, துறை முகத்தின் வலது பக்கமாக கரையைக் கடக்கும் என்பதை தெரிவிக்க இந்த கூண்டு ஏற்றப்படுகிறது.
7ம் எண் எச்சரிக்கை கூண்டு, இந்த கூண்டு ஏற்றப்பட்டால் துறைமுகங்கள் வழியாகவோ அல்லது அதற்கு மிக அருகிலோ புயல் கரையைக் கடக்கும் என்பதை அறிவிக்க ஏற்றப்படுகிறது.

8ம் எண் எச்சரிக்கை கூண்டு, இந்த எண் ஏற்றப்பட்டால் அபாயம் மிக்க புயல் துறைமுகத்தின் இடது பக்கமாக கரையைக் கடக்கும் என்று அர்த்தம்
9ம் எண் எச்சரிக்கை கூண்டு, இந்த எண் அறிவிக்கப்பட்டால் அபாயம் மிக்க புயல் துறைமுகத்தின் வலது பக்கமாக கரையைக் கடக்கும் என்று அர்த்தம்
10ம் எண் எச்சரிக்கை கூண்டு, அதி தீவிர புயல் உருவாகியிருக்கும் பட்சத்தில் இந்த எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும். துறைமுகத்தின் வழியாகவோ அதன் அருகிலோ இது கரையைக் கடக்கும் என்பதை வெளிப்படுத்த இது உதவும். 11ம் எண் எச்சரிக்கைக் கூண்டு,  வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் முற்றிலுமாகத் துண்டிக்கப்படும் நிலையில் இந்த புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுவது வழக்கம்.