Cleaning Tips: உங்க வீட்டில் கரப்பான் பூச்சி, எறும்புகளின் அட்டகாசம் தாஙக் முடியலையா? கிச்சனில் இருக்கும் சில பொருட்களை வைத்தே இவற்றை விரட்டியடிக்கலாம்.
வீட்டில் சாப்பாட்டுத் துகள்கள் ஏதாவது தரையில் சிதறினால் போதும்... சட்டுனு சிவப்பு எறும்பு, ஈ, கரப்பான் பூச்சிகளின் அட்டகாசம் அதிகமாகிவிடும். இது பார்க்க எரிச்சலாக இருப்பது மட்டுமல்லாமல், நோய்த்தொற்று பரவவும் காரணமாகலாம்.
கரப்பான் பூச்சி, எறும்புகளை விரட்டியடிக்கும் வழிகள்
நீங்களும் இதே பிரச்சினையால் அவதிப்படுகிறீர்களா? கடையில் விற்கும் கெமிக்கல் ஸ்ப்ரேக்களைப் பயன்படுத்தாமல், நம் கிச்சனில் இருக்கும் சில சிம்பிளான பொருட்களை வைத்தே இந்த பிரச்சனையை சரிசெய்யலாம். தினமும் வீடு துடைக்கும் தண்ணீரில் இந்த பொருட்களைக் கலந்து துடைத்தால், அந்த வாசனைக்கே பூச்சிகள் வீட்டுப் பக்கம் வராது.
1. வெள்ளை வினிகர்
ஒரு பக்கெட் தண்ணீரில் சுமார் அரை கப் வெள்ளை வினிகரை நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். பிறகு, இந்தத் தண்ணீரைக் கொண்டு வீடு முழுவதும் துடையுங்கள். வினிகரின் வாசனை எறும்புகளுக்கும் மற்ற பூச்சிகளுக்கும் சுத்தமாகப் பிடிக்காது. அதுமட்டுமல்ல, இது தரையில் உள்ள பிசுபிசுப்பான கறைகளை நீக்கி, டைல்ஸை பளபளப்பாக மாற்றும்.
2. எலுமிச்சை சாறு
வீட்டில் வினிகர் இல்லை என்றால், எலுமிச்சையையும் பயன்படுத்தலாம். ஒரு பக்கெட் தண்ணீரில் 2 முதல் 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து வீடு துடையுங்கள். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் தரையில் உள்ள கிருமிகளை அழிக்கும். இதன் புளிப்பு வாசனை ஈ மற்றும் பிற பூச்சிகளை விரட்டி, வீடு முழுவதும் ஒரு ஃபிரெஷ்ஷான நறுமணத்தை கொடுக்கும்.
Chapati Dough: சப்பாத்தி மாவை ஃப்ரிட்ஜ்ல வைக்கலாமா? எத்தனை நாள் கெடாமல் இருக்கும்?
3. வேப்பிலை தண்ணீர்
வேப்பிலை ஒரு இயற்கையான கிருமிநாசினி என்பது நம் எல்லோருக்கும் தெரியும். சில வேப்பிலைகளைத் தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வையுங்கள். தண்ணீர் ஆறியதும், அதை வடிகட்டி வீடு துடைக்கும் தண்ணீரில் கலந்துகொள்ளுங்கள். இந்தத் தண்ணீரால் வீடு துடைத்தால், எந்த கெமிக்கலும் இல்லாமல் தரை சுத்தமாகும். கரப்பான் பூச்சி, எறும்பு போன்ற பூச்சிகள் பக்கத்தில்கூட வராது.
4. உப்பு
இது மிகவும் பழமையான மற்றும் எளிமையான ஒரு வீட்டு வைத்தியம். வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு ஸ்பூன் உப்பு போட்டுக் கரைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தண்ணீரால் வீடு துடைத்தால், எறும்பு வரிசை உடனடியாக காணாமல் போய்விடும். வாஸ்து சாஸ்திரப்படியும், உப்பு நீரால் வீடு துடைத்தால் வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜி நீங்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
Puri Tips: மாவு இப்படி பிசைஞ்சா போதும்... பூரி பலூன் மாதிரி உப்பி, சாயங்காலம் வரை சாஃப்டா இருக்கும்!
5. பேக்கிங் சோடா மற்றும் லிக்விட் சோப்
சமையலறை அல்லது டைனிங் ஹால் தரை எண்ணெய் பிசுபிசுப்புடன் இருந்தால், வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு பேக்கிங் சோடா மற்றும் சில துளிகள் லிக்விட் சோப் கலந்து சுத்தம் செய்யுங்கள். இது உணவுத் துகள்களால் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்கி, கரப்பான் பூச்சிகள் வருவதைத் தடுக்கும். வீட்டில் சின்னக் குழந்தைகள் இருந்தால், கெமிக்கல்களுக்குப் பதிலாக இந்த மாதிரி இயற்கையான வழிகளைப் பயன்படுத்துவதுதான் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பாதுகாப்பானது. இன்றே இந்த டிப்ஸை முயற்சி செய்து பாருங்கள்.


