கணவன்- மனைவிக்குள் தாம்பத்யம் தாண்டி இருக்கும் காதலை தெரிந்துக்கொள்வது எப்படி..? 

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்க அவர்கள் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயம் என்னவென்று தெரிந்து கொள்வது நல்லது.

இன்றைய காலகட்டத்தில் பம்பரம்போல் சுழன்று வேலைக்கு சென்று வருவதும், எப்போது பார்த்தாலும் வேலை வேலை என அதிக டென்ஷனோடு இருப்பதும், வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு சென்றும், அலுவலகத்திலிருந்து வீடு திரும்புவதுமாக இருக்கிறது வாழ்க்கை. இதற்கிடையில் கணவன் மனைவி அல்லது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் எவ்வளவு நேரம்தான், அவர்களுக்காக ஒதுக்குகிறார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். அதற்கான பதில் நம்மிடம் முழுமையாக இருக்காது அல்லது இல்லை என்று பதில் அளிக்க தோன்றும் .

ஆனால் ஒரு சில விஷயங்களில் முக்கியத்துவம் கொடுத்தே ஆக வேண்டும், அதாவது கணவன் மனைவி இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து இரவு உணவை தயார் படுத்துவதிலும், அன்று நடந்த சில முக்கிய விஷயங்களை பற்றியும், அன்றைய நாள் முழுவதும் நடந்த சந்தோஷமான விஷயங்களை இருவரும் சமைத்துக் கொண்டே பேசுவது, அவர்களுக்குள்ளே இருக்கக் கூடிய அழகான நட்பை, காதலை மேலும் உறுதிப்படுத்தும்; வெளிப்படுத்தும்; இருவருக்குள்ளும் அதிக இணக்கத்தையும் ஏற்படுத்தும்.

இதேபோன்று இரவு நேரத்தில் நடை பயிற்சி மேற்கொள்வது என்பது மிகவும் அலாதியான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. அதுவும் காதல் துணையுடன் நடைப்பயிற்சி செய்தால் மனதிற்கு பிடித்த சில விஷயங்களை பேசிக் கொண்டே செல்லலாம். அப்போது எதிரில் ஐஸ்க்ரீம் விற்பவர் வந்தால் ஒரு குல்பி வாங்கி சாப்பிட்டுக் கொண்டே நடைபயிற்சி செய்வது, அதைவிட முக்கியமான ஒரு விஷயம் குழந்தைகளிடம் புது புது கதையை சொல்லிக் கொண்டு அவர்களை சிரிக்க வைத்து தாமும் சிரித்து அழகு பார்ப்பது வேறு லெவல்.

அதேபோன்று கணவன் மனைவி இருவரும் உறங்குவதற்கு முன்பாக கை கால்கள் அசதியாக இருக்கிறது என்றால், சுடு தண்ணீரில் கால்களை நனைத்து பேசிக்கொண்டே , ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி பாதங்களுக்கு அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்துகொள்வது மிகவும் சிறப்பான ஒன்று.

இதெல்லாம் உதாரணத்திற்கு கொடுக்கக் கூடிய சில விஷயங்கள் இது போன்று இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றது. அவற்றை எல்லாம் நம் வாழ்க்கையில் கடைபிடித்தால் கண்டிப்பாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் குடும்ப வாழ்க்கை மிகவும் அருமையாக செல்லும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது.