தோசை கல்லில் தோசை வராமல் அடிக்கடி ஒட்டிக்கொண்டு இருக்கிறது என்றால் உங்களுக்காக சில டிப்ஸ் இங்கே.

Tips To Avoid Dosa Sticking To Tawa : தென்னிந்தியாவின் பிரபலமான காலை உணவு இட்லி தோசை தான். அதிலும் குறிப்பாக இட்லியை விட தோசைக்கு தான் மவுஸ் அதிகம். சாப்பிடுவதற்கு சுவையாகவும் செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருப்பது இந்த தோசை தான். ஆனால் காலையில் அவசர அவசரமாக தோசை சுட்டுக் கொண்டிருக்கும் போது தோசையானது தோசை கல்லில் ஒட்டிக்கொண்டு நம்முடைய பொறுமையை ரொம்பவே சோதிக்கும். ஒவ்வொரு முறையும் தோசை சுடும்போது இந்த மாதிரி நடந்தால் நமக்கு எரிச்சல் தான் ஏற்படும். ஆனால் இது குறித்து கவலைப்பட வேண்டிய தேவையில்லை. தோசை கல்லில் தோசை ஒட்டாமலும், கிழியாமலும் அருமையாக வருவதற்கு சில டிப்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மட்டும் பின்பற்றினால் போதும். அது என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.

புதிய தோசை கல்லுக்கான டிப்ஸ்:

முதலில் தோசை கல்லை வாங்கிய உடனே அதன் மேல் இருக்கும் அழுக்குகளை நீக்க தேங்காய் நார் அல்லது காட்டன் துணி என எதுவாக இருந்தாலும் அதை வைத்து சுத்தம் செய்யுங்கள் ஆனால் ஸ்க்ரப்பர் மட்டும் பயன்படுத்த வேண்டாம். மேலும் இதற்கு நீங்கள் சோப் அல்லது லிக்விட் என போன்றவை பயன்படுத்தலாம். அடுத்ததாக தோசை கல்லை அடுப்பில் வைத்து நன்றாக சூடு படுத்த வேண்டும். பிறகு அதில் சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றவும். இப்போது கல்லின் மேல் வெற்றிலை போட்டுக் கொள்ளுங்கள். அந்த எண்ணெயில் வெற்றிலை நன்றாக சூடானது மற்றொரு வெற்றிலையையும் போடவும். இப்போது ஒரு ஸ்பூன் கொண்டு வெற்றிலையை தோசை கல்லில் எல்லா இடத்திலும் நன்றாக தேய்த்துக் கொள்ளுங்கள். ஐந்து நிமிடம் அப்படியே வைத்துவிட்டு, பிறகு அந்த எண்ணெயை துடைத்து விட்டு இப்போது நீங்க தோசை சுட ஆரம்பிக்கலாம். அப்படி தோசை சுடும் போது தோசை கல்லின் மேல் ஒட்டாமலும், கிழியாமல் மொறு மொறுவென்று சூப்பராக வரும். ஒருவேளை உங்களிடம் வெற்றிலை இல்லை என்றால் வாழை இலையை பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க: தோசைக் கல்லில் எண்ணெய் பிசுக்கு நீங்கி மொறுமொறு தோசை சுட சூப்பர் டிப்ஸ்!!

பழைய தோசை கல்லுக்கான டிப்ஸ்:

பழைய தோசை கல் என்றாலே துரு கண்டிப்பாக இருக்கும். எனவே முதலில் தோசை கல்லை அடுப்பில் வைத்து அதை நன்றாக சூடாக்கி அதன் மேல் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் உப்பு, எலுமிச்சை அல்லது வினிகர் என எதுவாக இருந்தாலும் அதன் மேல் போட்டு நன்றாக தேய்க்க வேண்டும். பிறகு தோசை கல்லை கழுவி ஒரு வெங்காயத்தை பாதியாக நறுக்கி சிறிது எண்ணெய் தேய்த்து தோசை கல் முழுவதும் நன்றாக தேய்க்க வேண்டும். இப்போது அதில் தோசை ஊற்றுங்கள். தோசை ஒட்டாமல் அருமையாக வரும். வெங்காயம் இல்லை என்றால் கத்தரிக்காய் கூட பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க: 10 நிமிஷத்தில் இரும்பு தோசை கல்லை சுத்தம் செய்ய ஈஸியான டிப்ஸ்.. நீங்கள் தயாரா..??

மற்றொரு வழி..

ஒரு சிறிய காட்டன் துணியில் கொஞ்சமாக புளி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த துணியை எண்ணெயில் நனைத்து தோசை கல் முழுவதும் நன்றாக தேய்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக எல்லா இடங்களிலும் படும்படி நன்கு தடவ வேண்டும். இப்போது தோசை கல்லை கழுவி கல் காய்ந்ததும் அதில் புளி கலந்து எண்ணெயை மீண்டும் தடவ வேண்டும். அடுத்து வெங்காயத்தை கொண்டு தோசை கல் முழுவதும் தேய்த்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தின் சாறு தோசை கல்லில் ஒரு மெல்லிய அடுக்கு உருவாக்கி தோசை கல்லில் ஒட்டாமல் நன்றாக வருவதற்கு உதவும். மேலே சொன்ன குறிப்புகளின் படி தோசை கல்லில் தோசை சுட்டால் இனி எந்த தொல்லையும் உங்களுக்கு வராது. மகிழ்ச்சியாக தோசை சுட்டு சாப்பிடலாம்.

குறிப்பு : நீங்கள் எப்போது தோசை சுட்டாலும் தீயை அதிகமாக வைக்காமல் மிதமான சூட்டில் வைத்து தோசை சுடுங்கள்.