நன்பகல் நேர உறக்கம் உடலுக்கு நன்மையா...?? தீமையா...??
நன்பகல் நேரத்தில் உறங்குவதால் உடலுக்கு பல்வேறு வகையில் தீங்கு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக மதியம் தூங்குவதால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக பலரிடையே கருத்து நிலவுகிறது. எனினும் அலுவலகத்தில் இருந்தாலும், வீட்டில் இருந்தாலும் பலருக்கும் மதியம் நேரத்தில் ஒரு கோழித் தூங்குவது பெரும் இன்பமாக இருக்கக்கூடிய ஒன்றாகவே உள்ளது. ஒரு சிலருக்கோ இதுவொரு பெரும் கனவாக இருக்கிறது. இந்நிலையில், நன்பகலில் தூங்குவது தொடர்பாக நம்மிடைய நிலவும் கருத்துக்கள் உண்மைதானா, மதியம் உறங்குவதில் ஏதேனும் நன்மைகள் உள்ளனவா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பூனைத் தூக்கம்
நன்பகல் நேரத்தில் உறங்குவதை ஆங்கிலத்தில் பூனைத் தூக்கம் (Cat nap) என்று குறிப்பிடப்படுகிறது. எப்போதும் பூனை விழிப்புடன் தான் தூங்கும், ஏதாவது சத்தம் கேட்டாலோ அல்லது வாசனை வந்தாலோ எழுந்துவிடும். அதனால் இது பூனைத் தூக்கம் என்று குறிப்பிடப்படுகிறது. எப்போது படுத்தாலும் ஆழமான உறக்கத்துக்கு சென்றுவிடுபவர்களுக்கு, நன்பகல் உறக்கம் சற்று பிரச்னை தான். அப்படிப்பட்டவர்களால் அலுவலகத்தில் ஒழுங்காக வேலை செய்ய முடியாது, வீடுகளிலும் பம்பரமாக இருக்க முடியாது. எப்போது, எங்கே படுத்தாலும் நிம்மதியாக தூங்கக்கூடியவர்கள், மதிய நேரங்களில் உறங்குவதை தவிர்ப்பது அவர்களுடைய வாழ்வியலுக்கு நல்லது.
குறிப்பிட்ட நேரம் தூங்கலாம்
நன்பகலில் உறங்குவதற்கு என்று நேரம் உண்டு. தூக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மதிய நேரம் தூங்குவதால் மூளையின் செயல்திறன் அதிகரிப்பது தெரியவந்துள்ளது. ஆனால் தூங்குவதற்கு என்று குறிப்பிட்ட இருப்பதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நன்பகலில் உறங்குபவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும் திறன், புதிய விஷயங்களை சேகரித்து நினைவாற்றல் வைத்துக்கொள்ளக் கூடிய திறன் உள்ளிட்டவை ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அதற்கு மதியம் 1 முதல் 4 மணிக்குள் மட்டுமே தூங்க வேண்டும், அதுவும் 20 முதல் 40 நிமிடங்கள் வரை மட்டுமே உறக்கம் பிடிக்க வேண்டும் என ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
கொத்தமல்லி அரைச்சு ஃபேஸ்பேக் போட்டா போதும்- உங்க முகம் எப்படி இருக்கும் தெரியுமா?
நீண்ட நேரம் தூங்கக் கூடாது
வரையறுக்கப்பட்ட நேரத்தை விட ஒரு மணி நேரம் அல்லது 2 மணிநேரம் கூடுதலாக தூங்கிவிட்டால், உடல்நலன் பாதிக்கக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது நன்பகல் நேரங்களில் நீண்ட தூரம் தூங்கி எழும்போது உடம்பெல்லாம் வலி எடுக்கும், சோர்வு மற்றும் அசதி அதிகமாகும். மேலும் மூளையில் செயல்திறன் குறையவும் வாய்ப்புள்ளது. அதை தொடர்ந்து வேறு எந்தவிதமான வேலையும் பார்க்க முடியாது. சோம்பலும், கொட்டாவி மட்டுமே மிஞ்சும்.
கட்டுப்பாடு இல்லாமல் தோன்றும் காம உணர்வுகள்- என்ன செய்யலாம்?
இரவு நேரம் தூக்கம் வராது
மதியம் நீண்ட நேரம் தூங்கிவிடுவதால், இரவு தூக்கம் பாதிக்கப்படும். இதனால் தூக்கமின்மை பிரச்னை ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. இரவு தூக்கம் தடைப்பட்டால் மன அழுத்தம் அதிகரிக்கும், உடலுக்கு வேண்டிய சுரபிகள் செயல்படுவது தடைபடும், இதனால் உடல்நலன் பிரச்னை ஏற்பட்டு மருத்துவரை அணுக வேண்டிய சூழல் ஏற்படும். அதேபோன்று இரவில் தூங்காமல் கண்விழித்து கணினி முன்னால் உட்கார்ந்து வேலை பார்ப்பதாலும் தூக்கமின்மை பிரச்னையை ஏற்படுத்தும். இரவு தூக்கத்துக்கு நல்ல உணவு, தண்ணீர் குடிக்கும் பழக்க உள்ளிட்டவை அவசியம். விரைவில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை எடுத்துக் கொண்டு இரவில் தூங்கச் செல்வது, உங்களுடைய உறக்கத்தை எந்தவிதத்திலும் பாதிக்காது.
உடல் எடை கூடும் வாய்ப்பு?
நன்பகல் நேரத்தில் தூங்குவதால், உடல் எடை கூடுமா என்கிற கேள்வி பலருக்கும் உள்ளது. ஆனால் இல்லை என்பது தான் ஆய்வின் மூலம் தெரியவரும் செய்தி. தூக்கம் என்பது இயற்கையாக நடக்கும் செயல்பாடு. சாப்பிட்டு படுத்தாலும், பசியுடன் படுத்தாலும் உங்களுக்கு உறக்கம் வரத்தான் செய்யும். ஜப்பானில் சுமோ வீரர்கள் உடல் எடையை அதிகரிக்க, இவ்வாறு மதியம் நன்றாக சாப்பிட்டு தூங்குவார்களாம். ஆனால் இது பாரம்பரியமான நம்பிக்கை தானே தவிர, வயிறு முட்டச் சாப்பிடு 3 மணிநேரம் 4 மணிநேரம் தூங்குவதால் உடல் எடை கூடாது என்பது தான் உண்மை. இரவு தூக்கம் தடைபட்டு, உடல்நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு அது வழிவகுக்கும் என்பதே உண்மை.