30 வயதில் குழந்தை பெற நினைக்கும் தம்பதியினர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இங்கு காணலாம்.

இன்றைய காலகட்டத்தில் பல தம்பதியினர் குழந்தை பெற்றுக் கொள்வதை தாமதப்படுத்துகின்றனர். இதற்கு பல காரணங்களை சொல்கின்றனர். உண்மையில் கருவுறுதல் என்பது நம்முடைய விருப்பத்தின்படி மட்டுமே நடைபெறக்கூடிய விஷயம் இல்லை. சிலருக்கு பல வருட காத்திருப்புக்கு பின் கூட கைகூடாமல் போய்விடுகிறது என்பதே நிதர்சனம். நகர்ப்புறங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் குழந்தை பெற்றுக் கொள்வதை தாமதப்படுத்துவது இயல்பாகிவருகிறது. கிட்டத்தட்ட 30 வயது வரையும் கூட சில தம்பதியினர் குழந்தை பெறுவதை தாமதப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் இதனால் கருவுறுதல் மற்றும் இனப்பெருக்க செயல்முறைக்கு சில சிக்கல்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் பல தம்பதியினர் ஒரு குழந்தையை வளர்ப்பதற்கே தங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் அர்ப்பணித்துக் கொள்கின்றனர். தாமதமாக திருமணம் செய்வது, ஒருவருக்கொருவர் புரிந்து கொண்ட பின் குழந்தையை பெற்றெடுத்துக் கொள்ள வேண்டும் என முடிவு செய்வது என திருமண பந்தத்தில் பல விஷயங்கள் மாறிவிட்டன. அதுமட்டுமின்றி IVF, IUI, ICSI உள்ளிட்ட இனப்பெருக்க தொழில்நுட்பங்கள் இன்றைய தம்பதிகளிடையே புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

உயிரியல் கடிகாரம் பற்றி தெரியுமா?

தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடுவது பல வழிகளில் நன்மையாக இருந்தாலும் நம்முடைய உடலுக்கு அது அவ்வளவு ஏற்ற விஷயம் அல்ல. வயதுக்கு ஏற்ப ஆண், பெண் இருவரிடமும் கருவுறுவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. அதிலும் 30களின் தொடக்கத்தில் பெண்களின் கருமுட்டைகளின் எண்ணிக்கை, அவற்றின் தரம் ஆகியவை குறைகிறது. இதனால் 35 வயதிற்கு பிறகு பெண்களின் கருவுறும் திறன் என்பது வேகமாக குறைகிறது.

இன்றைய காலகட்டத்தில் பல பெண்களுக்கு முன்கூட்டியே மாதவிடாய் நின்றுவிடுகிறது. ஆண்களுக்கும் இனப்பெருக்க ஆரோக்கியத்திலும் மாற்றம் ஏற்படுகிறது. அவர்களின் வயதுக்கேற்ற விந்தணுக்கள் குறைகிறது. அவற்றின் தரமும், இயக்கமும் குறைவதும் பரவலாக காணப்படுகிறது. இயற்கை கருத்தரித்தல்!

செயற்கை முறையை விட இயற்கையான கருத்தரிப்பதை முன்னுரிமையாக கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் தம்பதிகள் அவர்கள் தயாராக இருக்கும் போது கருத்தரிக்க வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் தாமதமாக பெற்றோராவது பல ஆபத்துக்களை கொண்டிருக்கிறது. 30 வயதிற்கு பின் இயற்கையாக கருத்தரிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. கருச்சிதைவு, மரபணு அசாதாரணங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

உள சிக்கல்கள்

தாமதமாக கருத்தரிக்கும் முயற்சி செய்யும் தம்பதிகள் சமூக அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். கருத்தரிக்க பல சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள்ளும் தள்ளப்படுகின்றனர். உடல் மற்றும் உளரீதியான அழுத்தம் தம்பதிகளை மிகவும் அழுத்துகிறது. அதிலும் பெண்களுக்கு இதில் பாதிப்பு அதிகம். இதைத் தடுக்க 30 வயதை நெருங்கும் ஆண், பெண் இருவரும் கருத்தரித்தல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கருவுறுதல் பரிசோதனை!

ஆண், பெண் இருவருமே தங்களுடைய இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்து தெரிந்து கொள்வது அவசியம். 20 வயதின் பிற்பகுதியில் அல்லது 30 வயதில் முற்பகுதியில் கருவுறுதல் பரிசோதனைகளை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்.

செயற்கை முறையில் கருத்தரிக்க முடிவு செய்தால் அதன் நன்மை, தீமைகளை அவசியம் புரிந்து கொள்ள வேண்டும். அது குறித்த அறிதலுக்கு பின்பே கருவுறுதல் குறித்து முடிவு செய்ய வேண்டும்.

அமர்ந்த வாழ்க்கை முறையில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். நல்ல தூக்கம், வாரத்தில் ஐந்து நாட்கள் உடற்பயிற்சி, தினமும் நடைபயிற்சி, சத்துள்ள உணவுகளை உண்பது போன்றவை இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

நீங்கள் 30 வயதிற்கு பின் குழந்தை பெற திட்டமிட்ட நபராக இருந்தால், அதில் தோல்வியை சந்தித்தால் குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள். 35 வயதிற்கு பின் கருவுறுதல் பிரச்சனை எனில் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும்.