நமது உடல் நல்ல ஆரோக்கியத்துடனும், வலிமையுடனும் இருக்க வேண்டுமானால், தேவையான அளவு கலோரி மற்றும் சத்துகள் உடைய உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும். சுவையாக இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக கண்ட உணவுகளையும் சாப்பிடுவது, ஒபிசிடி, சர்க்கரை நோய் உள்ளிட்ட பல பிரச்சனைகளில் முடியும். மேலும், சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். கண்ட நேரத்தில் சாப்பிடுவதும் உடலுக்கு தீங்கையே ஏற்படுத்தும்.

குறிப்பாக, சில உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிடாமல், தவறான நேரத்தில் சாப்பிடுவதன்மூலம், அவை சரியாக செரிமானம் ஆகாமலோ, அல்லது ஒரு உணவை சாப்பிட்ட பின், சாப்பிடும் மற்றொரு உணவை செரிமானம் ஆக விடாமலோ போய்விடும். இதனால், அஜீரணக்கோளாறு, மலச்சிக்கல், வயிற்றுவலி போன்றவற்றை சந்திக்க நேரிடும். சாப்பிடக் கூடாததை சாப்பிட்டு மருத்துவருக்கு செலவழிப்பதும், சாப்பிடக் கூடியதை தவறான நேரத்தில் சாப்பிட்டு மருந்துகளுக்கு செலவழிப்பதும் வீண்.

சரி! எந்த எந்த உணவுகளை எப்போது சாப்பிடலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.

பகல் நேரத்தில் சாப்பிடக்கூடிய உணவுகள்

வாழைப்பழம் : இது மிகச்சிறந்த பழம். வாழைப்பழத்தை பகல் நேரத்தில் சாப்பிடுவதால், உடல் இயக்கம் சீராக பராமரிக்கப்படும். அதே நேரத்தில் இரவில் சாப்பிட்டால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே இரவில் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது.

தயிர் : இதை பகல் நேரத்தில் சாப்பிடும்போது, உடலுக்கு தேவையான விட்டமின்கள், சத்துகளைத் தருவதோடு, குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அதே நேரத்தில் இரவு வேளையில் சாப்பிட்டால், உடல் சூட்டை கிளப்பிவிட்டு, அஜீரணக் கோளாறு, சளி, இருமல் போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.

அரிசிச் சோறு : ஸ்டார்ச் சத்து அதிகமாக இருக்கும் அரிசிச் சோறை பகல் நேரத்தில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் சாப்பிடுவதால், வயிறு உப்புசத்துடன் இருப்பதோடு, நிம்மதியான உறக்கத்தையும் கெடுக்கும். மேலும், செரிமானத்துக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், உடல் பருமன் பிரச்சனையையும் உருவாக்கும்.

க்ரீன் டீ : ஆண்டி ஆக்சிடன்ஸ் நிறைந்த க்ரீன் டீயை நிறைய பேர், காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்கின்றனர். அவ்வாறு குடிப்பது தவறு. அவ்வாறு குடித்தால், உடல் வறட்சி மற்றும் அஜீரணக் கோளாறையே ஏற்படுத்தும். இதை வெறும் வயிற்றில் குடிப்பதைவிட, பகல் நேரத்தில் குடிப்பதே சிறந்தது.

காபி : இரவு நேரத்தில் குடிப்பதால், செரிமாணப் பிரச்சனை ஏற்படும். எனவே காபியை எப்போதும் பகலில் மட்டுமே குடிக்க வேண்டும்.

ஆரஞ்சு ஜூஸ் : வைட்டமின் சி உள்ள ஆரஞ்சு ஜூஸை இரவு நேரத்தில் குடித்தால், வயிற்றில் அமில சுரப்பை அதிகப்படுத்தும். அதனால், அஜீரணக் கோளாறு ஏற்படும். எனவே பகலில் மட்டுமே ஆரஞ்சு ஜூஸ் குடியுங்கள்.

சர்க்கரை : சர்க்கரை கலந்த பானங்களை எப்போதும் பகலில் மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். இரவு நேரத்தில் சர்க்கரை கலந்த பானங்களை பருகுவதால், உடலில் கொழுப்புகளின் அளவை அதிகரித்து, உடல் இயக்கத்தைப் பால்படுத்தும்.

ஆப்பிள் : முக்கிய ஆண்டி ஆக்சிடன்ஸ் நிறைந்த ஆப்பிளை இரவு நேரத்தில் சாப்பிட்டால், வயிற்றில் அமில சுரப்பை அதிகரித்து, வாயுத் தொல்லையை அதிகரிக்கும். எனவே பகல் நேரத்தில் ஆப்பிளை சாப்பிட வேண்டும்.

இரவு நேரத்தில் சாப்பிடக்கூடிய உணவுகள்

பால் : அத்திவாசிய ஊட்டச்சத்துகள் நிறைந்த பாலை நாம், இரவு நேரத்தில்தான் குடிக்க வேண்டும். பகலில் குடித்தால் சோம்பலை உருவாக்கும் பால், இரவு நேரத்தில் உடல் ரிலாக்ஸ் ஆக உதவுவதோடு, அதில் இருக்கும் அனைத்து சத்துகளும் உடலுக்கு முழுமையாக கிடைக்கும்.

டார்க் சாக்லெட் : சர்க்கரை மிகக் குறைவாகவும், கொக்கோ பொருள் அதிகமாகவும் இருக்கும் டார்க் சாக்லெட்டை இரவு நேரத்தில் சாப்பிட வேண்டும். அதனால், மனநிலையும், ரத்த அழுத்தமும் சீராக இருக்கும்.

ரெட் ஒயின் : ஆல்கஹால், ஆண்டிஆக்சிடன்ஸ் மற்றும் கரோனரி நிறைந்த ரெட் ஒயினை மாலை அல்லது இரவு நேரத்தில் ஒரு டம்ளர் குடித்தால், உடலால் விரைவாக உறிஞ்சப்பட்டு, ஆரோக்கியத்தையும், சுறுசுறுப்பையும் கொடுக்கும்.