இரவில் நிம்மதியான தூக்கமும், காலையில் சீக்கிரம் எழுந்து, சுறுசுறுப்பாக நாளை துவங்குவதற்கும் என்னெனன்ன முறைகளை கடைபிடிப்பது என தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படின்னா இது உங்களுக்கு தான். இந்த சிறிய மாற்றங்களை வாழ்க்கையில் கொண்டு வந்தாலே போதும் இனி அலாரமே இல்லாமல் காலையில் சீக்கிரமாக எழுந்து விடலாம். 

தினசரி காலையில் அலாரமே இல்லாமல் சீக்கிரம் எழுந்திருக்கணுமா? இந்த சூப்பர் டிப்ஸ் டிரை பண்ணி பாருங்க

சென்னை : இரவு படுக்க செல்வதற்கு முன் காலையில் இத்தனை மணிக்கு எழுந்தருளிக்க வேண்டும் என்று நினைத்து தான் அலாரம் வைத்து விட்டு தூங்குவோம். ஆனால் அலாரம் எப்போது அடித்தது என்றே தெரியாத அளவிற்கு தூங்கி விடுவோம். பிறகு காலையில் லேட்டாக எழுந்து விட்டு பரபரப்பாக ஓடிக் கொண்டே இருப்போம். 

சிலருக்கும் இரவில் சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது, சிலருக்கு எவ்வளவு தூங்கினாலும் உடல் அசதியாகவே இருப்பது போன்ற பல காரணங்களால் காலையில் நம்மால் சீக்கிரம் எழுந்திருக்க முடியாமல் இருக்கும். ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருப்பதற்கு தூக்கம் மிக மிக முக்கியம். இரவில் நன்றாக தூங்கி, காலையில் அலாரமே இல்லாமல் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்பவர்கள் சில எளிய முறைகளை தினமும் பின்பற்றி வந்தாலே வாழ்க்கையே மாறி விடும். காலையில் சீக்கிரம் எழுந்து, புத்துணர்ச்சியுடன் நாளை துவங்க என்னென விஷயங்களை கடைபிடிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உணவுகள் :

* நிம்மதியாக தூங்க வேண்டும் என்கிறவர்கள் இரவில் பாதாம் சாப்பிடுவது நல்லது. இரவில் பாதாம் பருப்பை வறுத்து, சாப்பிட்டு வந்தால் தூக்கம் நன்றாக வரும். இதில் உள்ள மெக்னீசியம், மனஅழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவை குறைத்து, இரவில் நிம்மதியான தூக்கத்தையும், காலையில் சுறுசுறுப்பாக எழுந்திரிக்கவும் வழிவகுக்கும்.

* காலையில் எழுந்ததும் காய்கறி ஜூஸ் குடிப்பதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு கிடைக்கும். அனைத்து காய்கறிகளையும் சேர்த்து ஜூஸ் செய்து குடிப்பது நல்லது. இதனால் இரவில் நேரத்திற்கு தூக்கமும், காலையில் விரைவில் எழுந்திருக்கும் திறனும் ஏற்படும்.

* இரவில் மஞ்சள் கலந்த பால் குடிப்பதால் விரைவில் தூக்கம் கிடைக்கும். சோம்பல் இல்லாமல் வேலை செய்ய விரும்புபவர்களும் இதை குடித்து வரலாம். இரவில் தூங்குவதற்கு முன் இளம் சூட்டில் பால் குடிப்பது விரைவாக தூக்கம் வர உதவும்.

* அதிகாலையில் ஏற்படும் சோம்பலை போக்கி, சுறுசுறுப்பு தர துளசி டீ குடிக்கலாம். இதில் ஆக்சிஜனேற்ற பண்புகள் அதிகம் உள்ளதால், இரவில் பால் சேர்க்காமல் துளசி டீ குடிக்கலாம். தண்ணீருடன் துளசி இலைகளை சேர்த்து, நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.

உடற்பயிற்சி :

* இரவில் தூங்குவதும், காலையில் எழுந்து கொள்வதும் சிரமமாக இருந்தால் இரவு தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக 30 நிமிடங்கள் எளிமையான உடற்பயிற்சிகளை செய்து வாருங்கள். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து தூக்கத்தை சமநிலைப்படுத்தும். அதே சமயம் கடினமான ஒர்க் அவுட், தாமதமாக உடற்பயிற்சி ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

* அதிக நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதை தவிர்த்து சிறிது நேரத்திற்கு ஒரு முறை 10 நிமிடங்களாவது நடக்கும் பழக்கத்தை பழகுங்கள். ஒவ்வொரு வேளை உணவிற்கு பிறகும் 10 நிமிடங்கள் குட்டி வாக் போய் விட்டு வருவது, உங்கள் உடலை பகல் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். அதே சமயம் இரவில் விரைவாகவே தூக்கம் வரவழைத்து விடும். இரவில் நிம்மதியான தூக்கத்தை தருவதால் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் தானாக விழித்து விட முடியும்.