அடுத்தடுத்து நல்ல செய்தி..! கொரோனா எதிரொலியால் மக்களுக்கு எப்படி எல்லாம் சலுகை பாருங்க..! 

கொரோனா எதிரொலியால் தொடர்ந்து அரசு தரப்பிலிருந்து அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளது. அதில் முக்கிய சிலவற்றை பார்க்கலாம்.

வருகிற 1 மற்றும் 4ஆம் தேதிகளில், தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு யாகம் செய்யப்படும் என அறநிலையத்துறை அறிவிப்பு . ஹோமம், பாராயணம், சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் யாகங்களில் பொதுமக்கள் பங்கேற்க கூடாது எனவும், அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு  உள்ளது 

புதுச்சேரியில் பால் மற்றும் மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் பகல் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். விவசாயிகள் விவசாய பொருட்கள் எதையும் எங்கும் கொண்டு செல்ல தடையில்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார் 

தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்பட மாநில வங்கிகள் குழு அறிவுறுத்தியுள்ளது 

ஊரடங்கின் போது பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்  என  தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன் படி விற்பனையாளர்களுக்கு ரூ.2,500 மற்றும் பொட்டலமிடுபவர்களுக்கு ரூ.2,000 என அறிவிக்கப்பட்டு உள்ளது 

தனியார் பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஜூன் மாதம் வாங்க வேண்டிய கட்டணத்தை பள்ளிகள் தற்போது வாங்க கூடாது. மீறினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்து உள்ளார் 

ஏப்ரல் 1ம் தேதியான நாளை முட்டாள்கள் தினம் என்பதால் தவறான தகவல்களை பரப்பக்கூடாது. கொரோனா தொடர்பாக ஏதேனும் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிர அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்து உள்ளார் 

அடுத்த 3 மாதங்களுக்கு கடன்களுக்கான இ.எம்.ஐ., வட்டி வசூலிக்கப்படாது என தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரிசர்வ் வங்கியின் உத்தரவு அந்தந்த வங்கிகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனவும் கூறி உள்ளார் 

தமிழகத்தில் 144 தடையை மீறியதாக இதுவரை 33,006 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக காவல் துறை அறிவித்துள்ளது. வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களிடம்  வீட்டு வாடகை கேட்டு கட்டாயப்படுத்தும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வாடகை வீட்டில் குடியிருப்போர் யாரிடமும் உரிமையாளர்கள் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது.