இந்தியாவின் இஸ்ரோ தலைவரான டாக்டர் சிவனின் வாழ்க்கை கந்தல் துணியிலிருந்து தொடங்கியது. ஒரு சிறு விவசாயின் மகன் கல்லூரியில் படிக்கும் வரை செருப்பு கூட அணியாமல் இருந்துள்ளார்.

இஸ்ரோவின் தலைவர் என்பதையும் கடந்து சந்திரயான்-2 திட்டம் செயல்படுத்துவதற்கு முன்னதாக வெளியுலகுக்கு அதிகம் தெரியாதவராகவே சிவன் இருந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 62 வயதான ராக்கெட் விஞ்ஞானி சிவன், கடந்த 2018 ஜனவரி மாதம் இஸ்ரோவின் தலைவராக கிரண் குமாருக்கு பதிலாக நியமிக்கப்பட்டார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தரக்கண்விளை கிராமத்தைச் சேர்ந்த சிவன், உள்ளூரில் உள்ள அரசு பள்ளியில் படித்தவர். பின்னர் நாகர்கோவியில் உள்ள ஹிந்து கல்லூரியில் படித்து பட்டம் பெற்றுள்ளார். சிவனின் உறவினரான சண்முகவேல் கூறுகையில், குடும்பத்தின் முதல் பட்டதாரி சிவன் தான் அவர் ஒரு சுயம்புவாகவே வளர்ந்தார். இதுவரை பயிற்சி வகுப்புகளுக்கு அவர் சென்றதில்லை என்கிறார். 

மாணவ பருவத்தில் பள்ளி, கல்லூரி முடிந்து தந்தையின் மாங்காய் தோட்டத்தில் பணியாற்றுவதை வாடிக்கையாக கொண்டிருந்தவர் சிவன். இவர் தோட்டத்தில் பணியாற்றும் போது தந்தைக்கு வேலையாட்களுக்கு கூலி மிச்சப்படுத்தப்படும் என்பதால் உற்சாகமாக பணிபுரிந்துள்ளார். அதே போல சென்னையில் எம்.ஐ.டி கல்லூரியில் படிக்க சேர்ந்த போது தான் முதல் முதலாக செருப்பு அணிந்ததாகவும் அதுவரை வெறும் காலுடனே நடந்திருப்பதாகவும் அவரே கூறியுள்ளார். 

வழக்கமாக ஒவ்வொருவரும் கல்லூரிகளை தேர்ந்தெடுக்க வெவ்வேறு விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் சிவனின் தந்தையின் விருப்பப்படி வீட்டிற்கு அருகில் இருக்கிற கல்லூரியை தேர்ந்தெடுந்தார். அப்போதுதான் அவருக்கு உதவ முடியும்.  தனது தந்தையால் தனது பொறியியல் படிப்புக்கு நிதியளிக்க முடியாததால் இளங்கலை அறிவியல் படிப்பைத் தொடர்ந்துள்ளார். ஆனால் சிவன் பொறியியல் படிக்க விரும்பியுள்ளார். அவரது தந்தையால் செலவிட முடியாததால் இளங்கலை அறிவியல் படித்துள்ளார். 

அதன்பின், பிடெக் படித்துள்ளார். பின் வேலையில்லாமல் கஷ்டப் பட்டுள்ளார். காரணம் அந்த சமயத்தில் ஏரோநாட்டிக்கல் படிப்புக்கான வேலை மிகவும் குறைவாகவே இருந்தது. இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட், நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆகியவற்றில் மட்டுமே நோக்கம் இருந்தது. அதன் பின் ஐ.ஐ.எஸ்சியில் மேல் படிப்புக்கு சென்றுள்ளார். 

டாக்டர் சிவனுக்கு தனது முழுவாழ்க்கையிலும் அவர் விரும்பியதையேதும் பெறவில்லை. ஆனால் அவருக்கு கிடைத்த வாய்ப்பினை சிறப்பாக செய்தார். செயற்கைக்கோள் மையத்தில் சேர விரும்பி இருக்கிறார். ஆனால், விக்ரம் சரபாய் மையத்தில் வாய்ப்பு கிடைத்தது. அங்கேயும் ஏரோடைனமிக்ஸ் குழுவில் சேர விரும்பியுள்ளார். ஆனால் பி.எஸ்.எல்.வி திட்டத்தில் சேர்ந்துள்ளார். எல்லா இடங்களிலும் அவர் விரும்பியது ஏதும் கிடைக்கவில்லை என அவ்வப்போது வருத்தப்படுவார்.

1980களில் ஏரோனாடிக் பொறியியல் பட்டத்தை சென்னையில் உள்ள MIT கல்லூரியிலும், விண்வெளி பொறியியலில் முதுகலை பட்டத்தை பெங்களூருவில் உள்ள IISC கல்வி நிறுவனத்திலும், IIT பாம்பே கல்வி நிறுவனத்தில் டாக்டரேட் பட்டமும் பெற்றுள்ளார். இது தவிர சத்யபாமா பல்கலைக்கழகம் 2006ல் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கு கவுரவித்துள்ளது.

1982ல் இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார் சிவன். பிஎஸ்எல்வி உள்ளிட்ட பல திட்டங்களில் இவரின் பங்கு அளப்பரியதாக இருந்தது. பல திட்டங்களில் திட்டமிடுதல், வடிவமைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் திட்டப் பகுப்பாய்வு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

 தனது 30 ஆண்டுகளுக்கும் மேலான பணி அனுபவத்தில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் திட்ட இயக்குனர் என்பதை கடந்து GSLV, PSLV, GSLV MkIII உள்ளிட்ட திட்டங்களில் அவர் பணிபுரிந்துள்ளார். இஸ்ரோ தலைவர் பதவியுடன் சேர்த்து விண்வெளித்துறை மற்றும் விண்வெளி ஆணையத்தின் தலைவர் பொறுப்பையும் அவர் கவனித்து வருகிறார்.