வாஷிங் மெஷினில் துணி துவைக்கும் பொழுது முதியவர் ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வாஷிங் மெஷினால் பறிபோன உயிர்
ஒரு சிறு அலட்சியம் கூட நமது உயிரை பறித்து விடும் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம். நாம் பயன்படுத்தும் அன்றாட உபகரணங்கள் கூட எவ்வளவு ஆபத்தானவை என்பதை இந்த வீடியோ விவரிக்கிறது. வாஷிங் மிஷினில் துணி துவைத்துக் கொண்டிருந்த ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வாஷிங் மெஷினில் துணி துவைக்க அந்த நபர் தயாராகிக் கொண்டிருக்கிறார். முதலில் அவர் சோப்புப் பொடியை சேர்த்து பின்னர் வாஷிங் மிஷின் சுவிட்சை ஆன் செய்திருக்கிறார் வாஷிங்மெஷினில் மின்சாரம் கசிந்து இருப்பது தெரியாமல் அவர் தண்ணீரில் கைய வைக்கிறார். அடுத்த நொடி அவர் மீது மின்சாரம் தாக்கி சில நொடிகளில் அவர் உயிர் பிரிந்தது.
விழிப்புணர்வை ஏற்படுத்திய வீடியோ
இந்த வீடியோ பலரின் மனதையும் உலுக்கியிருக்கிறது. சிறிது நேரத்திற்கு முன்னால் துணி துவைக்க தயாராகிக் கொண்டிருந்த ஒருவர் நொடியில் மரணம் அடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ நமக்கு பயத்தை ஏற்படுத்தினாலும் அதே சமயம் வாஷிங் மெஷின் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளது. வாஷிங் மெஷின் தொடர்பான இது போன்ற விபத்துக்கள் ஏற்கனவே பலமுறை நடந்துள்ளன. சமீபத்தில் கூட லக்னோவில் 28 வயதான நபர் ஒருவர் மெஷினை பழுது பார்க்கும் பொழுது மின்சாரம் தாக்கி இறந்தார். மின்சாதனங்களில் நாம் செய்யும் கவனக்குறைவு எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்த சம்பவங்கள் விளக்குகின்றன. குறிப்பாக மின் சாதனங்களை ஈரக் கையுடனோ அல்லது ஆபத்தான முறையிலோ இயக்குதல் கூடாது.
கவனத்துடன் கையாள வேண்டும்
வாஷிங் மெஷின் போன்ற தண்ணீருடன் தொடர்புடைய மின்சாதனங்களை இயக்கும்பொழுது கவனமாக இயக்க வேண்டும். மின்சாரம் உடலில் பாய்ந்து மின்னதிர்ச்சி ஏற்படுகிறது. இது நரம்புகளை பாதித்து உடலில் வெப்பத்தை உருவாக்குகிறது. மின்சாரத்திலிருந்து நபரை பிரிக்க முடியாமல் போய்விட்டால் கடுமையான காயம் அல்லது மரணம் ஏற்படலாம். வாஷிங் மெஷினானது தண்ணீர் மற்றும் மின்சாரம் இரண்டும் இணைந்து இயங்கும் ஒரு பொருள் என்பதால் இது மிகவும் ஆபத்தானது. வாஷிங் மெஷின் மீது மின்சாரம் பரவாமல் இயக்க மரத்தாலான அல்லது பிளாஸ்டிக்கால் ஆன ஸ்டாண்டில் வைக்க வேண்டும். மேலும் வாஷிங்மெஷினை முழுமையாக அணைத்த பின்னரே அந்த மிஷினில் கை வைக்க வேண்டும். மெஷின் ஓடிக்கொண்டிருக்கும் போது அல்லது மின்சார தொடர்பில் இருக்கும் பொழுது கை வைத்தல் கூடாது.
அடிக்கடி பழுது பார்க்க வேண்டும்
வீட்டில் வாஷிங் மெஷின் வைத்திருப்பவர்கள் அடிக்கடி வயர் மற்றும் பாகங்கள் சரியாக இயங்குகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மெஷின் உலோகப் பகுதியுடன் தொடர்பு கொள்ளும் பொழுது மின் கசிவு ஏற்படலாம். இதன் காரணமாக மெஷினை தொடும்பொழுது ஷாக் அடிக்கலாம். மின்சார சாதனங்களில் எர்த் ஒயர் என்பது மிக பாதுகாப்பான அம்சம். மின்கசிவு ஏற்படும் போது எர்த் வயர் மின்சாரத்தை நிலத்துக்கு அனுப்பி விடும். சரியான எர்த் கனெக்ஷன் இல்லை என்றால் மின்சாரம் மெஷினிலேயே தங்கிவிடும். ஈரமான கைகளால் மிஷினை தொடுவது அல்லது ஈரமான இடத்தில் நின்று கொண்டு மெஷினை இயக்குவது ஆகியவை மின்சார கடத்தல் அபாயத்தை அதிகரிக்கலாம். வாஷிங் மெஷின் மின் இணைப்பில் அல்லது கேபிளில் ஏதேனும் பழுது ஏற்பட்டு இருந்தால் ஷாக் அடிக்க வாய்ப்புள்ளது. எனவே இவற்றை உடனடியாக மாற்றி விட வேண்டும்.
முறையாக பராமரியுங்கள்
வாஷிங் மெஷின் சரியான எர்த் கனெக்சன் உடன் இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வாஷிங்மெஷினை இயக்கும் பொழுது அல்லது துணிகளை எடுக்கும் பொழுது கைகளும், கால்களும் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். செருப்பு அணிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது. வீட்டில் எர்த் லீக்கேஜ் சர்கியூட் பிரேக்கர் அல்லது ரெசிடியல் கரண்ட் சர்க்யூட் பிரேக்கர் ஆகியவை பொருத்தப்பட்டிருந்தால் மின் கசிவு ஏற்பட்டால் உடனடியாக மின்சாரம் தானாக துண்டிக்கப்பட்டு விடும். இது ஷாக் அடிப்பதில் இருந்து உங்களை பாதுகாக்கும். மெஷினில் இருந்து ஏதேனும் சத்தம் அல்லது அசாதாரணம் நடந்தால் உடனடியாக நிறுத்திவிட்டு டெக்னீஷனை அழைக்க வேண்டும். ஏதேனும் வெடிப்பு, தேய்மானம், பழுது இருந்தால் அந்த மெஷினை இயக்குதல் கூடாது. சமமான உயரமான இடத்தில் வைப்பதால் அதிர்வுகள் குறைக்கப்பட்டு பாகங்கள் சேதம் அடைவது தடுக்கப்படும்.
