காலேஜில் புதியதாக சேரும் மாணவர், மாணவிகள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இங்கு காணலாம்.
கடந்த கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றவர்கள் இந்த கல்வி ஆண்டில் கல்லூரியில் சேர்வார்கள். அவர்களின் இந்த புதிய கல்வி பயணம் பல புதிய விஷயங்களை கற்றுக் கொடுக்கும். சிலருக்கு கல்லூரி, விடுதி என புதிய விஷயங்கள் குறித்து அச்சமாக இருக்கலாம். மற்றவர்களிடம் பழக நேரம் எடுக்கலாம். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தெரியாமல் இருக்கும். இந்தப் பதிவில் காலேஜில் புதியதாக சேரும் மாணவர், மாணவிகள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இங்கு காணலாம்.
ஆடைகள்
உங்களுடைய கல்லூரியில் சீருடை இருந்தால் நல்லது. முறையாக துவைத்து உடுத்துங்கள். ஒருவேளை சீருடை இல்லாதபட்சத்தில் ஆடையை தேர்வு செய்வதில் கவனமாக இருங்கள். உங்களுடைய ஆளுமையை வெளிப்படுத்தக்கூடிய சிறந்த ஆடைகளை தேர்வு செய்யுங்கள். உங்களுடைய ஆடையைப் பொறுத்து மாணவர்களும், பேராசிரியர்களும் உங்களை மதிப்பிடக்கூடும். நல்ல ஆடைகள் நல்ல தோற்றத்தையும் தன்னம்பிக்கையும் வழங்கும்.
பயம் வேண்டாம்!
உங்களுடைய வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்குவது கல்லூரியில் தான். அந்த இடத்தில் நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டுமே தவிர, பயத்துடன் அல்ல. யாரும் உங்களை கிண்டல், கேலி செய்து விடுவார்கள் என பயப்பட வேண்டாம். ராகிங் போன்ற விஷயங்களை கல்லூரிகளில் செய்யக்கூடாது என சட்டமும், விதிகள் உள்ளன. எந்த விஷயமாக இருந்தாலும் உங்களின் சுயமரியாதையுடன் தைரியமாக கையாள கற்றுக் கொள்ளுங்கள். யாரையும் புண்படுத்தாமல் உங்களுடைய சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்வது மிகச் சரியான விஷயம்.
தோழமை தான் எல்லாம்!
புதிய இடத்தில் சற்று தயக்கமாக இருந்தாலும் எல்லோரிடமும் பழக முயற்சி செய்யுங்கள். நட்பை வளர்க்க நீங்கள் எடுக்கும் முயற்சி ஒருபோதும் வீணாகாது. நல்ல நண்பர்களை அடைவது வாழ்க்கையில் ஒரு பகுதியாகும். அனைவரிடமும் பேச முயற்சி செய்யுங்கள். நிச்சயமாக அதில் உங்களுடைய நண்பர் யார் என்பதை விரைவில் கண்டறிய முடியும்.
டைம் பாஸ்!
படிப்பதற்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்களோ அதேப் போலவே நண்பர்களிடம் செலவிடவும் ,உங்களுடைய சுய பராமரிப்புக்கும் நேரத்தை ஒதுக்குவது அவசியம். அவ்வப்போது கேளிக்கைகளுக்காக நேரம் ஒதுக்குவது, நண்பர்களுடன் உரையாடுவது மனதை இலகுவாக்கும். ஏனென்றால் கல்லூரி படிப்புக்கு பின் வேலை, குடும்பம் என பொறுப்புகள் மாறிவிடும். அதனால் கல்லூரி வாழ்க்கையை கொண்டாட்டமாக வாழுங்கள்.
உதவி கேட்பது நல்லது
உங்களுக்கு வகுப்பில் ஏதேனும் புரியாவிட்டால் அல்லது கல்லூரியில் ஏதேனும் விஷயங்களில் சந்தேகம் இருந்தால் அதை கேட்டு தெரிந்து கொள்வது தவறில்லை. புரியாத விஷயங்களை கேட்க பயப்படக்கூடாது. பேராசிரியர்களிடம், உடன் பயிலும் நண்பர்களிடமும் உங்களுடைய கேள்விகளைக் கேட்டு தீர்வுகளை கண்டறியுங்கள். இதனால் உங்களுடைய நம்பிக்கை அதிகரிக்கும்.
பேசும்போது ஜாக்கிரதை!!
நீங்கள் பள்ளியில் பயிலும்போது பேசிய விதமும், கல்லூரியில் பேசும் விதமும் ஒன்றல்ல. உங்களுடைய மொழியில் கவனமாக இருக்க வேண்டும். பிறர் மனதை புண்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக உங்களுடைய மதம், ஜாதி போன்ற விஷயங்களில் பெருமை கொள்வதையும், அது குறித்து சண்டையிடுவதையும் தவிருங்கள். எல்லாரையும் சமமாக கருத வேண்டும்.
காசு கறார்!
பணம் செலவழிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் கல்லூரிக்கு கட்டணங்கள் செலுத்தும் போது முழு கட்டளைகளையும் செலுத்தி விட்டீர்களா? உதவித்தொகைக்கு முறையாக விண்ணப்பித்து உள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்துவது அவசியம் பணத்தை செலவழிப்பது போலவே அதை சேமிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள். திட்டமிட்டு செலவு செய்வது உங்களை மாதக் கடைசியில் ரிலாக்ஸாக வைக்க உதவும். மன ஆரோக்கியம்
கல்லூரி வாழ்க்கையில் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதிகமான படிப்புச் சுமை, பொருளாதார சிக்கல்கள், விடுதியில் தங்கும் மாணவர்கள் குடும்ப பாசத்திற்கு ஏங்குவது என பல விஷயங்கள் மனதில் தோன்றலாம். உடல் நலனை பேணுவது போல மனநலனை பேணுவது அவசியம். கல்லூரியில் கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள். விளையாட்டுகளில் பங்கேற்பது உடலை, மனதை பேண உதவும். புதிய நட்புகள் கிடைக்கும்.
புதிதாக கல்லூரியில் சேரும் போது இந்த விஷயங்களை பின்பற்றுவது உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்கும். புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் உங்களுக்கு ஏசியாநெட்டின் வாழ்த்துகள்.
