இரவில் தொடர்ந்து 'மது' குடித்தால் மாரடைப்பு வருமா?
Liquor Drinking and Heart Attack : இரவு முழுக்க மது குடித்துவிட்டு தூங்கினால் மாரடைப்பு வருமா? என்பதை இந்த பதிவில் விரிவாக காணலாம்.
மது அருந்துவது உங்களுடைய இதயத்தை பாதிக்கும். எந்த காரணத்திற்காகவும் மருத்துவர் உங்களை மது அருந்த சொல்லமாட்டார். மது உடலுக்கு கேடு என்பதற்கு இதை தவிர வேறு சான்றுகளை காட்ட முடியாது. பொதுவாக மது அருந்துபவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் அருந்தினால் கூட அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆண் என்றால் 2 பானங்களுக்கு மேல் அருந்தக் கூடாது. ஒரு பானம் என்றால் 30 மில்லியாகும். பெண்கள் 1 பானத்தில் மதுவை நிறுத்தி கொள்ள வேண்டும். இந்த அளவை மீறும்போது இதய தசைகளுக்கு கேடு விளைவிக்கும்.
மது அருந்தாத ஒருவர் திடீரென மது அருந்தினால் மாரடைப்பு வருமா?
மது அருந்தும் பழக்கம் இல்லாத ஒருவர் திடீரென குடிக்கும்போது பின் விளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. மது அருந்தும் பார்டிகளுக்கு போகும் 200 பேரிடம் செய்த ஆய்வில் குறைவாக மது குடித்தவர்களுக்கு 2 நாட்களுக்கு மேலாக இதயத் துடிப்பு ஒழுங்கற்ற நிலையில் இருந்துள்ளது. இதயத்தில் திடீரென ஒழுங்கற்ற துடிப்பு இருப்பதால் மின் தூண்டுதல்களின் செயலிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இதயம் திடீரென துடிப்பதை நிறுத்தலாம். இதனை திடீர் இதயத் தடுப்பு (SCA) என்கிறார்கள்.
இதையும் படிங்க: காபி குடித்தால் மாரடைப்பு வராதா? ஆய்வு சொல்லும் உண்மை!! எப்படி காபி குடிக்கலாம்?
மதுவும் இதய பாதிப்பும்:
- நாம் அருந்தும் ஆல்கஹால் ஆபத்தான செல் நச்சுக்களில் ஒன்றாகும். மது அருந்துவது இதய தசைகளை சேதப்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் இதயத்தின் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. நம் உடலில் உள்ள கெட்ட ரத்தத்தை சுத்திகரித்து நல்ல ரத்தத்தை அனுப்பி வைப்பதில் இதயத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. இந்த செயல்முறையை மது அருந்துவது பாதிக்கலாம்.
- இதயத்தில் உள்ள வென்ட்ரிக்கிள்கள் ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 100 சமிக்ஞைகளை அனுப்பும். மது அருந்தினால் ஒரு நிமிடத்திற்கு 140 முதல் 160 சமிக்ஞைகள் என மாறும். இந்த சமநிலையின்மை இரத்தம் உறையவும், கட்டிகளை உருவாக்கவும் காரணமாகிவிடுகிறது. இந்த கட்டிகள் ரத்தம் மூலமாக மூளைக்கு சென்றால் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
- உடலின் தேவைகளை நிறைவு செய்ய போதுமான அளவில் ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தம் தேவை. மது அருந்தும்போது அந்த அளவு ரத்தத்தை இதயத்தால் அனுப்ப முடியாது. இதன் காரணமாக மாரடைப்பு அல்லது இதய செயலிழப்பைத் தூண்டப்படுகிறது. ஒரே நேரத்தில் ஆல்கஹால் அதிகமாக குடிப்பதால் இதய கோளாறுகள் ஏற்படுகின்றன. அதை தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: குளிர்காலத்தில் மாரடைப்பு அதிகமா வர இதுதான் காரணம்; உஷாரா இருங்க!!
அறிகுறிகள்:
தலைவலி, சோர்வு, வீக்கம், இருமல், மூச்சுத் திணறல், படபடப்பு, பதற்றம் போன்றவை ஏற்படலாம். இப்படியான அறிகுறிகள் தென்பட்டால் கண்டிப்பாக மது அருந்துவதை குறைக்கவேண்டும். ஒரே நாளில் அதிகப்படியான மதுவை குடிக்காமல், மிதமான அளவில் அருந்துவது உடலை பெரிய பாதிப்பு தவிர்க்க உதவும்.
எதை செய்யலாம்? எதை செய்யக் கூடாது?
- ஏற்கனவே உடலில் இதய பாதிப்பு இருப்பவர்கள் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஒரே நாளில் அதிகப்படியான மது அருந்தலை தவிர்க்க வேண்டும்.
- ஆரோக்கியமான நபர்கள் மிதமாக மது அருந்தலாம். மது அருந்தும்போது நண்பர்களுடன் உரையாட வேண்டும். உடலில் எலக்ட்ரோலைட் சமநிலை பாதிக்காமல் இருக்க நீரேற்றமாக இருப்பது அவசியம். சாப்பிடாமல் இருக்கக் கூடாது. வறுத்த பொரித்த உணவுகள் இல்லாமல் எளிதில் செரிக்கும் மிதமான உணவை சாப்பிட வேண்டும்.
- இரவு முழுக்க குடித்துவிட்டு, சரியாக தூங்காமல் மறுநாள் காலையில் ஜிம்மிற்கு செல்லக் கூடாது. மறக்காமல் ஓய்வெடுக்க வேண்டும்.
- இரவு முழுக்க குடிப்பது அல்லது அதிகமாக குடிப்பது இதயத் துடிப்பை அதிகரிக்க செய்யும். அதன் பின்னர் ஓய்வெடுக்காமல் உடற்பயிற்சி செய்வது, வேலைக்கு செல்வது போன்ற உடற்செயல்பாடு இதயத்தில் கூடுதலாக அழுத்தம் கொடுக்கும். இதுவே இதய செயலிழப்புக்கு காரணம். அதனால் அதிக மது அருந்திய பின்னர் ஓய்வெடுங்கள். ஆரோக்கியமாக வாழ முடிந்தவரை மது அருந்தாமல் இருங்கள்.