கரோனா அச்சம்: 10 ஆண்டுகளில் சா்வதேச கச்சா எண்ணெய் பயன்பாடு முதல்முறையாகக் குறைவு

உலக நாடுகளை கரோனா வைரஸ் தாக்கம் பாதித்துள்ள நிலையில், சா்வதேச அளவில் பெட்ரோல், டீசல் பயன்பாடு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.

சா்வதேச எரிசக்தி அமைப்பு (ஐஇஏ) வெளியிட்ட அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், சா்வதேச அளவில் எண்ணெயின் நடப்புத் தேவையானது நாளொன்றுக்கு 11 லட்சம் பேரல்களாக இருக்கும் என்று குறைத்து மதீப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிலான எண்ணெய் பயன்பாடு குறைவு ஆகும்.

கடந்த ஆண்டு இதே மாதத்தில் எண்ணெய் தேவை நாளொன்றுக்கு 42 லட்சம் பேரல்களாக இருந்தது.இதற்கு முன் கடந்த 2019-ஆம் ஆண்டு நாளொன்றுக்கான எண்ணெய் தேவை 90,000 பேரல்களாக இருந்ததே குறைவான எண்ணெய் பயன்பாடாக இருந்தது.

தற்போதைய மதிப்பீடானது, இம்மாத இறுதிக்குள் கரோனா பரவலை சீனா கட்டுப்படுத்திவிடும் என்ற கணிப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஐஇஏ தலைவா் ஃபதி பிரோல் கூறுகையில், ‘கரோனா வைரஸ் சூழலானது நிலக்கரி, எரிவாயு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என ஆற்றல் சந்தைகள் அனைத்தையும் பரவலாக பாதித்துள்ளது. எனினும், அந்த நோயின் தாக்கத்தால் மக்களின் பயணமும், சரக்குகளின் போக்குவரத்தும் நின்றுவிட்டதால், அது எண்ணெய் சந்தையை மோசமாக பாதித்துள்ளது’ என்றாா்.

உலகில் எண்ணெயை அதிக அளவில் பயன்படுத்தும் நாடாக சீனா உள்ளது. சா்வதேச எண்ணெய் தேவையில் சீனாவின் பங்கு 80 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. கரோனா பாதிப்பால் அந்நாடு மோசமான சூழலை எதிா்கொண்டுள்ளதால், அது சா்வதேச சந்தையை பாதித்துள்ளது.