மாற்றுத்திறனாளிகளுக்காக 1 கோடி மதிப்பிலான நிலத்தை எழுதி கொடுத்த ஆசிரியர்...! யாருக்கு இப்படி ஒரு மனசு வரும் சொல்லுங்க...!

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக முதியோர் இல்லம் கட்ட ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கி உள்ளனர் கோவையை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

கோவை அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆசிரியர் ஆறுமுகம். இவர் வீராசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்று உள்ளார். இவருடைய மனைவி தனபாக்கியம் செவிலியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 32 சென்ட் நிலத்தை தானமாக வழங்க முடிவு செய்து உள்ளனர். 

இதற்கு முன்னதாக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, அவர்கள் அடிப்படை வசதிகள் இன்றி போதிய இட வசதியும் இன்றி பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாக அறிந்துள்ளார். அதன் பின்னர் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என முடிவு எடுத்த ஆசிரியர், நிலத்தை தானமாக வழங்குவது குறித்து தன் மனைவி தனபாக்கியத்துடன  பேசி முடிவெடுத்து, அதன்படி 32 சென்ட் நிலத்தை தேர்வு செய்து தேசிய பார்வையற்றோர் இணையம் அமைப்பிற்கு தான பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.

இது தவிர நாச்சிபாளையம் என்ற பகுதியில் 15 ஆண்டுகளாக எஜுகேஷனல் சோஷியல் சர்வீஸ் என்ற தனியார் பள்ளியை நடத்தி வந்துள்ளார் ஆசிரியர் ஆறுமுகம். பின்னர் ஒரு கட்டத்தில் பள்ளியை நடத்த முடியவில்லை என்பதால் திருப்பூரில் உள்ள யுனிட் என்ற அறக்கட்டளையிடம் ஒப்படைத்து அதில் ஒரு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இந்த காலகட்டத்தில் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்களை பார்ப்பது என்பது மிகவும் அரிதிலும் அரிதான ஒன்றாக இருக்கிறது. இப்படியான ஒரு தருணத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக முதியோர் இல்லம் கட்டுவதற்கு ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கியுள்ள ஆசிரியர் ஆறுமுகம் தம்பதியினரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வாழ்த்து பெற்று செல்கின்றனர்.