வாகனம் முதல் தகவல் தொழில்நுட்பம் வரை பல்வேறு தொழில்களில் கொடி கட்டி பறக்கிறது மகிந்திரா குழுமம். அந்நிறுவனத்துக்கு சொந்தமான துணை நிறுவனங்களை நம்மால் விரல் விட்டு எண்ணி விட முடியாது. 

பல்வேறு துறைகளில் கொடி பறக்கும் மகிந்திரா குழுமத்தின் தலைவராக தற்போது ஆனந்த் மகிந்திரா இருந்து வருகிறார். ஆனந்த் மகிந்திரா சிறந்த தொழிலதிபர் மட்டுமல்ல நல்ல மனிதநேயம் மிக்க மனிதர். மேலும் டிவிட்டரில் மிகவும் பிரபலமான நபர்.
மகிந்திரா குழுமத்தில் விரைவில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற உள்ளது. 

முதலாவது மற்றும் முக்கியமான மாற்றம் என்னவென்றால் அந்த குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ஆனந்த் மகிந்திரா விலக போவதுதான். இது தொடர்பாக மகிந்திரா நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், நிர்வாகம், நியமனம் மற்றும் வருவாய் கமிட்டியின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஆனந்த் மகிந்திராவை தலைவர் பொறுப்பிலிருந்து நிர்வாகமற்ற தலைவராக மாற்ற நிறுவன இயக்குனர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் கொடுக்கப்பட்டது. 

இந்த புதிய நியமனம் 2020 ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது, லிஸ்டிங் ஒழுங்குமுறை விதிமுறை 17(1பி)ன் தேவைக்கு ஏற்ப என தெரிவித்துள்ளது.
இதுதவிர, மகிந்திரா நிறுவனம் தற்போது நிர்வாக இயக்குனராக இருக்கும் பவான் குமார் கோயங்காவை நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக மாற்றம் செய்துள்ளது.  

இது 2020 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. அவரது பதவி காலம் முடியும் வரை அதாவது 2020 நவம்பர் 11ம் தேதி வரை அவர் அந்த பதவியில் இருப்பார். அதன்பிறகு (நவம்பர் 12 முதல்) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக 2021 ஏப்ரல் 1ம் தேதி வரை மறுநியமனம் செய்யப்படுவார் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.