டுபாக்கூர் வக்கீல்கள் நம்ம ஊர்ல மொத்தம் எத்தனை பேர் தெரியுமா? யம்மாடி! என்று தலை சுத்த வைக்கும் கணக்கு!

உலகத்தில் பல விஷயங்களில் போலி! போலி! என போலிகள் மயம். வாட்ஸ் ஆப்பில் வரும் போலி ஃபார்வேர்டட் மெசேஜ்களைக் கூட ’ஃபேக்’ என்று சிம்பிளாக சொல்லி தவிர்த்துவிடலாம். 

ஆனால், போலிகள் இருக்கவே கூடாத விஷயங்கள் என்று சில உள்ளன. டாக்டர்கள், மருந்துகள் வரிசையில் போலி வழக்கறிஞர்களும் சமூக நன்மைக்கு ஆபத்துதான். காரணம் யார் தவறு செய்தாலும் தண்டனை வழங்க வேண்டிய துறையிலேயே போலி இருந்தால் என்னாகும் தேசம்?

ஆனாலும் போலி வழக்கறிஞர்கள் கொத்துக் கொத்தாக உள்ளதாக நீதித்துறையிலேயே பஞ்சாயத்து வெடித்துள்ளது. 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் செயலாளரான ராஜாகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்திலும், கமிஷனர் அலுவலகத்திலும் ஒரு புகார் தெரிவித்துள்ளார். அதில்  ஒரு நபர் போலி சான்றிதழ் கொடுத்து, தமிழ்நாடு பார் கவுனிசிலில் பதிவு செய்ய முயன்று வருவதாக தெரிவித்துள்ளார். விசாரணையில் இறங்கிய போலீஸ் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

ஆந்திராவில் உள்ள சில தரமற்ற கல்வி நிறுவனங்களும், போலி கல்லூரிகளும் இப்படி போலி வழக்கறிஞர் சான்றிதழ்களை பல ஆயிரம் பேருக்கு வழங்குவதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது விசாரணையில். தமிழக நீதித்துறையில் இது பெரும் அக்கப்போராக வெடித்துள்ளது. 

இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜோ “கடப்பா கல்லூரியில் இருந்து வந்த ஆயிரம் பேர் போலி சான்றிதழ்களுடன் பார் கவுன்சிலில் பதிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே ஒரு அறிக்கை அனுப்பியுள்ளோம். அதில் ‘யாரெல்லாம் போலி சான்றிதழ்கள் கொடுத்து சங்கத்தில் பதிவு செய்திருக்கிறார்களோ அவர்கள் தாங்களாகவே முன் வந்து தவறை ஒப்புக் கொண்டால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. ஆனால் அப்படி இல்லாமல் போலீஸ் விசாரணையில் உண்மை வெளிவந்தால், அந்த போலிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்! மேலும் இதுவரையில் அவர்கள் வழக்கறிஞராக நடித்து சம்பாதித்த பணம் முழுவதும்  அரசாங்கத்தின் மூலம் கைப்பற்றப்படும்’ என்று தெரிவித்துள்ளோம். போலிகளை இனி சும்மா விடப்போவதில்லை.” என்கிறார். 

இதே கவுன்சிலின் முன்னாள் தலைவரான செல்வம் “தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் இதுவரை கிட்டத்தட்ட ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் வழக்கறிஞர்களாக பதிவு செய்துள்ளனர். இவர்கள் பாதிக்கு பாதி பிற மாநிலங்களில் படித்த போலிகள்தான். இவர்கள் நீதிமன்றத்துக்கு வரமாட்டார்கள். ஆனால் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கட்டப்பஞ்சாயத்து செய்வார்கள்.

உண்மையான வழக்கறிஞர்களைக் கண்டறிய இணையதளம் உள்ளது. அதில் பதிவு செய்திருப்பதன் மூலம் கண்டறியலாம். அதேவேளையில் இந்த போலிகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்கிறார். 

தல சுத்துது மை லார்ட்!

-    விஷ்ணுப்ரியா