அடம் பிடித்து விவசாயியை கல்யாணம் கட்டிக்கிட்ட பொறியியல் பட்டதாரி..! இளம் பெண்  கூறும் அசத்தல் காரணம்..! 

விவசாயி மாப்பிள்ளைதான் வேண்டும் என்ற தீர்க்கமான முடிவோடு விவசாய மாப்பிள்ளையை திருமணம் முடித்த பட்டதாரி இளம்பெண்ணுக்கு அனைவரும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கண்ணமங்கலம் அருகே உள்ளது முனியன்தாங்கல் என்ற கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமணன். இவர் ஒரு விவசாயி. இவரின் மகள் பெயர் அரசம்மாள். பொறியியல் பட்டதாரியான இவர் விவசாயம் செய்யும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்துகொள்ள விருப்பம் என தெரிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து இவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக, அவருடைய தந்தை அதே பகுதியில் இரண்டாம் வகுப்பு படித்துவிட்டு விவசாயம் செய்து வந்த சிவக்குமார் என்பவருக்கு திருமணம் முடித்துவைக்க முடிவு செய்தார். மேலும் திருமண பரிசாக ரூபாய் 10 லட்சம் மதிப்பில் டிராக்டர் கலப்பை ஆகியவற்றை மகளுக்கு வழங்கிய சிறப்பு செய்தார் லட்சுமணன்.

இதுபற்றி அரசம்மாள் தெரிவிக்கும் போது, "எனக்கு விவசாய மாப்பிள்ளை தான் வேண்டும் என்பதில் குறியாக இருந்தேன்.. ஐடி துறையில் பணிபுரிந்து அடிமையாய் வாழும் நபரை  திருமணம் செய்துகொண்டு கஷ்டப்படுவதை விட நம் நாட்டுக்கு தேவையான விவசாய தொழிலை செய்து நிம்மதியான வாழ்க்கை வாழவே இந்த முடிவை எடுத்தேன். என்னுடைய படிப்பறிவும், அவருடைய விவசாய உழைப்பும் கொண்டு விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.. விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து மற்றவர்களுக்கு முன் உதாரணமாக நானே முதல் அடி எடுத்து உள்ளேன் என தெரிவித்து உள்ளார்.