காதல் வெற்றியாக இந்த தெய்வங்களை கும்பிட்டாலே போதும்
காதலில் வெற்றி பெற, காதலித்தவரையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் எந்தெந்த கடவுள்களை வழிபட்டால் கை மேல் பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

எவ்வளவு தான் ஆழமாக ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொண்டு, அன்பும், அக்கறையும் காட்டும் காதலன் அல்லது காதலி கிடைத்தாலும், அவர்களே வாழ்க்கை துணையாக அமைவார்கள், காதலில் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று யாராலும் உறுதியாக சொல்லி விட முடியாது. பலரின் காதல், கல்யாணம் வரை செல்வது கிடையாது. பலவிதமான காரணங்களால் வாழ்க்கையில் ஒன்று சேர முடியாமல் போய், ஒருவரை காதலித்து விட்டு மற்றவரை திருமணம் செய்து கொள்ளும் நிலைமை தான் பலருக்கும் உள்ளது. ஆனால் சரியாக காதல் துணை அமைந்து, அவரை வாழ்க்கை துணையாகவும் வருவதற்கும், காதல் வெற்றி அடைவதற்கும் தெய்வத்தின் அருளை பெறுவது அவசியம்.
படிப்பு, வேலை, திருமணம், கல்வி, குழந்தை போன்ற பலவிதமான பிரச்சனைகள் தீர அதற்குரிய தெய்வத்திடம் சென்று முறையிட்டால் கண்டிப்பாக வேண்டுதல் நிறைவேறும். ஆனால் காதல் வெற்றி அடைய எந்த தெய்வத்தை கும்பிடுவது? இதற்கெல்லாம் கூடவா தனியாக தெய்வம் உள்ளது என கேட்கிறீர்களா? கண்டிப்பாக உள்ளது. இந்த 5 தெய்வங்களை வழிபட்டால் கண்டிப்பாக காதலில் வெற்றி பெற முடியும். விரும்பியவரையே வாழ்க்கை துணையாக அடைய முடியும்.
காதல் வெற்றிக்கான தெய்வங்கள் :
1. ராதா கிருஷ்ணன் :
கிருஷ்ணரும் ராதையும் தெய்வீக காதல் மற்றும் அளவில்லாத பக்தியின் அடையாளமாக இருப்பவர்கள். திருமணமானவர்கள் கூட கிருஷ்ணன்-ராதையை வழிபட்டால் அவர்களுக்குள் அன்பும், ஒற்றுமையும் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமைய வேண்டும், நம்மை புரிந்த கொண்ட ஒருவர் வாழ்க்கை துணையாக வர வேண்டும், காதலிப்பவரையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பவர்கள் ராதா-கிருஷ்ணனை வழிபட்டு வரலாம்.
2. சிவன் பார்வதி :
சிவ பெருமானை எப்போதும் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக தவம் செய்து, அவரது உடலில் பாதியை பெற்றவள் பார்வதி தேவி. சிவ-சக்தி இணைந்த வடிவமே அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகும். அதே போல் தன்னுடைய கணவரை பிரியாமல் இருக்க வேண்டும் என பெண்கள் பலரும் அர்த்தநாரீஸ்வரரை வழிபடுவது உண்டு. வாழ்க்கையில் ஒன்று சேர வேண்டும், காதலில் வெற்றி பெற்று வாழ்க்கை முழுவதும் இணை பிரியாது இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் சிவன்-பார்வதியை வழிபடலாம்.
3. காமதேவன் :
காதலின் கடவுள் என சொல்லப்படுபவர் காமதேவர். இவரை விருப்பங்கள், ஆசைகள் ஆகியவற்றிற்கு முக்கிய காரணமாக இருப்பவர். அதனால் காதல் நிறைந்த திருமண வாழ்க்கை, மகிழ்ச்சியான திருமணம், விரும்பியவருடன் திருமணம் நடக்க வேண்டும் என்பவர்கள் காமதேவனை வழிபடலாம். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை, அன்பு, நெருக்கம், மகிழ்ச்சி அதிகரிக்கவும் காமதேவனை வழிபடுவது சிறப்பு.
4. சந்திரன் :
ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுபவர் சந்திரன். இவரை மனோகாரகன் என்று அழைப்பதுண்டு. ஒருவரின் மனநிலை, உணர்ச்சி ஆகியவற்றிற்கு காரணமாவர் இவர் தான். சந்திரன் மற்றும் சுக்கிரனின் அருள் இருந்தால் நினைத்தவரை திருமணம் செய்து கொள்ள முடியும். எத்தனை சவால்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு காதலில் வெற்றி பெற முடியும். அதனால் நவகிரகங்களில் ஒருவரான சந்திரனை வழிபடுவது நல்லது.
5. சுக்கிரன் :
காதல், அழகு, மகிழ்ச்சிக்குரிய கிரகமாக கருதப்படுபவர் சுக்கிரன். காதல் நிறைந்த வாழ்க்கை துணை அமையவும், காதலில் வெற்றி பெறவும் இவரை வழிபடுவது நல்லது. ஆசைகள் நிறைவேறுவது, அதிர்ஷ்டத்தை ஈர்ப்பது ஆகியவற்றிற்கும் இவரே காரணம். திருமணமாகி பிரிந்து இருப்பவர்கள், மீண்டும் வாழ்வில் ஒன்று சேர நினைப்பவர்களும் சுக்கிரனை வழிபடலாம்.