பைசா செலவு இல்லாமல் பளபளக்கும் முகத்தை பெற சூப்பரான வழி
முகம் அழகாக இருக்க வேண்டும் என நினைக்காத பெண்களே இருக்க முடியாது. ஆனால் அழகை பராமரிக்க தனியாக நேரம் ஒதுக்க முடியாமல் இருப்பவர்கள் மிக எளிமையான ஒரு முறையை பின்பற்றி வந்தால் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சென்னை : முகத்தை அழகாக்க, பளிச்சென, பளபளக்கும் முக அழகை பெறுவதற்கு பலரும் ப்யூட் பார்லருக்கு சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்கிறார்கள். இன்னும் சிலர் வீட்டிலேயே முகத்தை அழகாக்குகிறேன் என்ற பெயரில் கண்ட கண்ட பொருட்களை முகத்தில் தடவிக் கொண்டு, பிறகு அதனால் தோலில் அலர்ஜி ஏற்பட்டு அவதிப்படுவது உண்டு. இப்படி எந்த கஷ்டமும் இல்லாமல், வீட்டிலேயே, அதுவும் செம ஈஸியாக ஒரே ஒரு பொருளை வைத்து முக அழகாக இயற்கையாக பாதுகாக்க முடியும்.
அரிசி கழுவிய தண்ணீரை வைத்து தினமும் பயன்படுத்தி வந்தால் முகத்தை மென்மையாக, அழகாக பாதுகாக்க முடியும். அரிசி கழுவிய தண்ணீரை பொதுவாக நாம் கீழே தான் ஊற்றுவோம். ஆனால் இதில் வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டிஆக்ஸிடென்ட் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன. இது முகத்தை பளிச்சென்று இருக்க வைக்கும். கருமையை குறைத்து, முகத்தை இயற்கையாக மிளிர வைக்கும். தோலில் உள்ள கொலாஜின் உற்பத்தியை தூண்டி விடும். இதிலுள்ள ஸ்டார்ச் சத்துக்கள் அதிகப்படியான எண்ணெய் வழிவதை தடுத்து, முகத் துவாரங்களை சிறிதாக்கும். இந்த அரிசி தண்ணீரால் இன்னும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
முகம் பளபளக்க :
அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தி தினமும் முகத்தை கழுவி வர வேண்டும். இதிலுள்ள என்ஜைம்கள், தோலை பளிச்சென்று மின்ன செய்யும். இந்த தண்ணீரால் முகத்தை கழுவிய பிறகு சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவி விட்டு, சுத்தமான துண்டால் துடைத்து விட வேண்டும்.
தோலை மென்மையாக்க :
அரிசி தண்ணீரை தினமும் பயன்படுத்தி வந்தால் அது முகத்தில் இருக்கும் அழுக்குகளை அகற்றி விடும். தோலில் எரிச்சல் ஏற்படாமல் தடுத்து, தோல் வெடிப்புக்கள் ஏற்படாமல் தடுத்து, இயற்கையான அழகை அதிகரிக்க செய்யும். தோல் பராமரிப்பிற்கு இயற்கையான சிறந்த நிவாரணி இதுவாகும்.
முக துவாரங்களை சிறியதாக்கும் :
அரிசி தண்ணீர் தோலை இறுக்கமடைய செய்து முக துவாரங்களை சிறியதாக்கும். தோலின் தன்மையை பாதுகாக்கும். படிப்படியாக துவாரங்கள் மூடுவதால் முகத்தில் அழகு கூடும். தோலும் மென்மையாகவும், புத்துணர்ச்சியாகவும், சுத்தமாகவும் இருக்கும்.
வயதான தோற்றத்தை தடுக்கும் :
அரிசி தண்ணீரை தினமும் பயன்படுத்தி வந்தால் இதிலுள்ள அதிக ஆன்டிஆக்ஸிடென்ட் காரணமாக விரைவில் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கும். முக சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கும். இதனால் வயதானால் கூட உங்கள் முகம் இளமையாகவே காட்சி அளிக்கும்.