300க்கும் மேற்பட்ட கொடிய வைரஸ் மாதிரிகள் ஆய்வகத்தில் இருந்து காணாமல் போனதால் அதிர்ச்சி!
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து அரசு திங்களன்று நூற்றுக்கணக்கான கொடிய வைரஸ் மாதிரிகள் ஆய்வகத்திலிருந்து காணாமல் போயுள்ளதாக அறிவித்தது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து அரசு நூற்றுக்கணக்கான கொடிய வைரஸ் மாதிரிகள் ஆய்வகத்திலிருந்து காணாமல் போயுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் உயிரியல் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதற்கான விசாரணையை உடனடியாகத் தொடங்க ஆஸ்திரேலிய பொது சுகாதாரத் துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஹென்ட்ரா வைரஸ், லிஸ்ஸா வைரஸ் மற்றும் ஹாண்டா வைரஸ் உள்ளிட்ட பல தொற்று வைரஸ்களின் 323 குப்பிகள் குயின்ஸ்லாந்தின் பொது சுகாதார வைராலஜி ஆய்வகத்திலிருந்து ஆகஸ்ட் 2023 இல் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டது.
காணாமல் போன வைரஸ் மாதிரிகள் ஒரு தீவிர உயிரியல் பாதுகாப்பு குறைபாடு
ஹென்ட்ரா, லிஸ்ஸா வைரஸ் மற்றும் ஹாண்டா வைரஸ் உள்ளிட்ட 323 கொடிய வைரஸ் மாதிரிகள் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து ஆய்வகத்திலிருந்து காணாமல் போயுள்ளன. இதை தொடர்ந்து உயிரியல் பாதுகாப்பு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் மாதிரிகள் திருடப்பட்டதா அல்லது அழிக்கப்பட்டதா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
ஆஸ்திரேலிய அமைச்சர் திமோதி நிக்கோல்ஸ் இதுகுறித்து பேசிய போது , "உயிரியல் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறுவதும், தொற்று வைரஸ் மாதிரிகள் காணாமல் போவதும் மிகவும் தீவிரமான விஷயம். இது மீண்டும் நடக்காதவாறு குயின்ஸ்லாந்து சுகாதாரத் துறை இதை விசாரிக்க வேண்டும்." என்று தெரிவித்தார்.
பாஸ்டனில் உள்ள நார்தீஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் AI மற்றும் உயிரியல் அறிவியல் இயக்குநரான சாம் ஸ்கார்பினோ, ஆஸ்திரேலியாவில் உள்ள ஆய்வகத்திலிருந்து வைரஸ் காணாமல் போவது ஒரு தீவிர உயிரியல் பாதுகாப்பு குறைபாட்டிற்குச் சமம் என்று தெரிவித்துள்ளார்..
ஹாண்டா வைரஸ் மற்றும் லிஸ்ஸா வைரஸ் எவ்வளவு கொடியவை?
ஹென்ட்ரா என்பது ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படும் ஒரு விலங்கு-மனித வைரஸ். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்படி, ஹாண்டா வைரஸ்கள் என்பது கடுமையான நோய் மற்றும் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களின் குடும்பமாகும். லிஸ்ஸா வைரஸ் என்பது ரேபிஸை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களின் குழு என்பது குறிப்பிடத்தக்கது.
மாதிரிகள் காணாமல் போன ஆய்வகத்தில், "வைரஸ்கள் மற்றும் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த கொசு மற்றும் டிக் மூலம் பரவும் நோய்க்கிருமிகளுக்கான நோயறிதல் சேவைகள், கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வகத்தில் இருந்து வைரஸ் மாதிரிகள் காணாமல் போனது மூலம் "சமூகத்திற்கு ஆபத்துக்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் அரசாங்கம் இது தொடர்பான விசாரணையை தொடங்கி உள்ளது. விசாரணையின் முடிவில் தான் வைரஸ் காணாமல் போனதற்கு என்ன காரணம் என்பது தெரியவரும்.