முதல் முறையாக... 175 வருடத்தில் எழும்பூர் மருத்துவமனையில்...20 கிலோ கேன்சர் கட்டி அகற்றம்...! 

குரோம்பேட்டையை சேர்ந்த 51 வயது ரதி என்ற பெண்ணின் வயிற்றிலிருந்து 20 கிலோ எடை கொண்ட புற்றுநோய் கட்டி சென்னை எழும்பூர் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவமனையில் இன்று அகற்றப்பட்டது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள குறிப்பில், 

"குரோம்பேட்டை சேர்ந்த 51 வயது மதிக்கத்தக்க ரதி என்பவர் எழும்பூர் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில், தனக்கு 7 வருடமாக வயிற்றில் கட்டி உள்ளதாக குறிப்பிட்டு சிகிச்சை பெற வந்தார். அவரை பரிசோதனை செய்து பார்த்ததில் சினைப்பையில் கட்டி உள்ளதாக கண்டறியப்பட்டது. எனவே அவர் மகளிர் சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக கடந்த 6 ஆம் தேதி அன்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறப்பு ரத்தப் பரிசோதனைகள் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து சினைப்பையில் உள்ள புற்றுநோய் கட்டி உறுதிசெய்யப்பட்டது.

புற்றுநோய் அறுவை சிகிச்சை வல்லுனர் மற்றும் குடல் நோய் சிறப்பு மருத்துவர் ஆலோசனை கொடுக்கப்பட்ட பின்னர் அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி டிசம்பர் 10 ஆம் தேதி அன்று பேராசிரியர் சீதாலட்சுமி தலைமையில் மருத்துவர் ரத்தன மாலினி, மருத்துவர் திரிபுரசுந்தரி, மருத்துவர் புனித மீனாட்சி மற்றும் மயக்கவியல் நிபுணர் என இவர்கள் அனைவரும் மேற்கொண்ட முயற்சியில் இரண்டு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து 20 கிலோ எடை உள்ள புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது.

இந்த மருத்துவமனை 175 வருடமாக செயல்பட்டு வருகிறது. இது நாள் வரை இவ்வளவு எடையுள்ள கட்டியை அகற்றியது கிடையாது. தற்போது நோயாளிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து நோயாளி நலமுடன் உள்ளார். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டது. மற்றும் கண்காணிப்பாளர் சம்பத்குமார் தலைமையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என இயக்குனர் மற்றும் கண்காணிப்பாளர் மருத்துவர் சம்பத்குமார் அறிக்கை கொடுத்துள்ளார்.

தற்போதைய சூழலில் எங்கு பார்த்தாலும் கேன்சர் கட்டி என்பது சாதாரண ஒன்றாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கூட கண்டுபிடிக்க முடியாத சில காரணங்களும் இருக்கின்றன. இருந்தபோதிலும் அன்றைய காலகட்டத்தில் நாம் எடுத்துக் கொண்ட உணவு பொருட்கள் சத்து மிகுந்தவை இயற்கைத் தன்மையுடன் இருந்தது.

ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் நாம் உண்ணும் உணவு கண்டிப்பாக இருக்கிறது. இதன் காரணமாகவும் மாறிவரும் கலாசாரம் இயற்கை சூழ்நிலை என பல்வேறு காரணங்களால் நம்முடைய வாழ்க்கை முறையும் மாறிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் உறங்கும் முறையிலிருந்து உடுத்தும் ஆடை வரை அனைத்திலும் மாற்றம் மாற்றம் என்றே சொல்லலாம். இவை அனைத்துமே நம்முடைய ஆரோக்கியம் பாதிப்பதற்கு பெரிய காரணமாக இருக்கின்றது என்றால் யாராலும் மறுக்க முடியாது.

இப்படி ஒரு தருணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு  20 கிலோ எடை கொண்ட புற்றுநோய் கட்டி ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்டு உள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.