ஐபிஎல் 12வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இலங்கை முன்னாள் ஜாம்பவான் சங்கக்கரா இந்த முறை ஐபிஎல் கோப்பையை எந்த அணி வெல்லும் என ஆருடம் தெரிவித்துள்ளார். 

இதுவரை 11 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் இணைந்து 8 முறை கோப்பையை வென்றுள்ளன. சில அணிகள் தொடர்ந்து கோப்பையை வென்றுவரும் நிலையில், சில அணிகள் தொடர்ந்து சொதப்பிவருகின்றன. இதுவரை கோப்பையை வென்றிராத ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகளுமே முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன. அதற்காக பல அதிரடி மாற்றங்களையும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளன. 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் எந்த அணி கோப்பயை வெல்லும் என முன்னாள் ஜாம்பவான் சங்கக்கரா ஆருடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய சங்கக்கரா, மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என கணித்துள்ளார்.

சங்கக்கரா கணித்துள்ள மூன்று அணிகளில் மும்பையும் சென்னையும் ஏற்கனவே தலா 3 முறை கோப்பையை வென்ற வெற்றிகரமான அணிகள். டெல்லி கேபிடள்ஸ் அணி மட்டும்தான் இதுவரை கோப்பையை வென்றிராத அணி. இதுவரை கோப்பையை வென்றிராத 3 அணிகளில் டெல்லி கேபிடள்ஸ் அணிதான் இம்முறை கோப்பையை வெல்வதில் தீவிரமாக உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு 2 முறை உலக கோப்பையை வென்று கொடுத்த மற்றும் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவருமான ரிக்கி பாண்டிங், டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். அவர் மட்டும் போதாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை ஆலோசகராக டெல்லி அணி நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது.