இளைஞர்களுக்கான விசா: இரண்டாம் கட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து!
இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒப்பந்தந்தின்படி, இளைஞர்களுக்கான விசா வழங்கும் இரண்டாம் கட்டத்தை இங்கிலாந்து தொடங்கியுள்ளது

இளம் தொழில்முறை வல்லுநர்கள் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு விசா வழங்க இந்தியா - இங்கிலாந்து இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த திட்டத்தின் கீழ், இந்திய இளைஞர்கள் விசா விண்ணப்பிக்கும் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பை இங்கிலாந்து தொடங்கியுள்ளது. இந்த தகவலை டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் விசா விண்ணப்பிக்க 18 முதல் 30 வயதுடைய பட்டதாரி இளைஞர்கள் தகுதி பெற்றவர்கள். தகுதியான இளைஞர்களுக்கு இங்கிலாந்தில் இரண்டு ஆண்டுகள் வரை வாழ, வேலை செய்ய அல்லது படிக்க இந்த விசா வாய்ப்பளிக்கிறது. இரண்டாம் கட்ட வாக்கெடுப்பானது ஜூலை 27 ஆம் தேதி முடிவடையும் என இங்கிலாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.
“நீங்கள் பட்டதாரி அல்லது முதுகலை தகுதியுடன் 18-30 வயதுக்குட்பட்ட இந்திய நாட்டவராக இருந்தால், இளம் தொழில்முறை வல்லுநர்கள் திட்ட விசாவிற்கு விண்ணப்பிக்கவும். ஜூலை 27 ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைகிறது.” என டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டிற்கு மொத்தம் 3,000 இடங்கள் உள்ளன. கடந்த பிப்ரவரிமாதம் நடைபெற்ற முதல் வாக்கெடுப்பில் பெரும்பாலான இடங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள இடங்கள் இந்த மாதம் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் பூர்த்தி செய்யப்படும் என இங்கிலாந்து விசா மற்றும் குடிவரவுத்துறை தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறை இயக்குனருக்கு பணி நீட்டிப்பு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு!
வாக்கெடுப்பின்படி தேர்ந்தெடுக்கப்படுவது இலவசம் என்றாலும், இந்த விசாவுக்கு விண்ணப்பிக்க 259 பவுண்டுகள் செலவாகும் என விண்ணப்பதாரர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் நிதி, கல்வி மற்றும் பிற தேவைகளைப் பூர்த்தி செய்பவர்களாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. கூடுதல் செலவாக சுகாதார கட்டணமாக 940 பவுண்டுகள் மற்றும் விண்ணப்பதாரரின் தனிப்பட்ட சேமிப்பில் 2,530 பவுண்டுகள் இருப்பதற்கான ஆதாரம் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
கடந்த நவம்பரில் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் நிதி சுனக் இடையே இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் விசாக்கள், பரஸ்பரம் இரு நாட்டவர்கள் அந்தந்த நாடுகளில் வசிக்கவும், வேலை செய்யவும் அனுமதிக்கிறது.
இந்திய மற்றும் பிரிட்டிஷ் பொருளாதாரங்களை வலுப்படுத்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்துடன் வலுவான இணைப்புகளை உருவாக்குவதற்கான இங்கிலாந்தின் பரந்த அர்ப்பணிப்புதான் இந்த இளம் தொழில்முறை வல்லுநர்கள் திட்டம் என அழைக்கப்படுகிறது.