AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தபடியே ஆரஞ்சுத் தோட்டத்தை கண்காணிக்கும் இளம் விவசாயி கௌரவ் பிஜ்வே, விதர்பாவில் லாபகரமான விவசாயத்திற்கு முன்னோடியாகத் திகழ்கிறார்.
அதிகாலையில் வயல்களுக்குச் செல்லும் விவசாயிகளின் வழக்கத்திற்கு மாறாக, மகாராஷ்டிராவைச் (maharashtra) சேர்ந்த ஒரு இளம் விவசாயி வீட்டிலிருந்தபடியே ஆரஞ்சுத் தோட்டத்தை கண்காணிக்கிறார். அதுவும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி. மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் உள்ள கர்பி கிராமத்தைச் சேர்ந்த கௌரவ் பிஜ்வே என்ற விவசாயி, வறட்சி அதிகம் உள்ள விதர்பா பகுதியில் விவசாய முறையை முழுமையாக நவீனப்படுத்தியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு மூலம் விவசாயம்…
அறுபது ஆண்டுகளாக விவசாயப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வரும் இந்தப் பகுதியில், கௌரவ் தனது 8 ஏக்கர் நிலத்தில் 1200 ஆரஞ்சு மரங்களை அதிநவீன முறையில் வளர்க்கிறார். ஆனால் ஒரு நாள் கூட விவசாய நிலத்திற்குச் செல்லாமல், வீட்டிலிருந்தபடியே தனது மொபைல் பயன்பாட்டின் மூலம் தோட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கும் கௌரவ், செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் விவசாயம் செய்யும் முதல் விவசாயிகளில் ஒருவராகத் திகழ்கிறார்.
இந்த அமைப்பை செயல்படுத்த அவர் சுமார் ரூ.60,000 செலவு செய்துள்ளார். மண் ஈரப்பதம், வானிலை, வெப்பநிலை போன்றவற்றைக் கண்காணிக்கும் உணரிகள் இந்த அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. பயிர்களுக்கு பூச்சித் தாக்குதல் இருந்தால் முன்கூட்டியே தகவல் அளிக்கின்றன. இதனால் நீர் பயன்பாடு குறைந்துள்ளது, பூச்சிக்கொல்லி பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முடிந்தது.
கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது இந்த முறை ஒவ்வொரு மரத்திலும் சராசரியாக 1000 முதல் 1500 ஆரஞ்சுகள் வந்துள்ளதாக கௌரவ் தெரிவித்தார். நாசிக்கைச் சேர்ந்த விவசாய நிபுணர்கள் இந்தத் தோட்டத்தைப் பார்வையிட்டு, நாட்டிலேயே ஆரஞ்சு சாகுபடியில் இதுவே முதல் AI முயற்சி என்று குறிப்பிட்டுள்ளனர். இப்போது கௌரவின் தோட்டத்தைப் பார்வையிட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள், நிபுணர்கள் வருகை தருகின்றனர்.
