என் ஒரு தாய் இங்கிருக்கிறார்; இன்னொரு தாயை மணிப்பூரில் கொன்று விட்டீர்கள் என நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது பேசிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மீதான விவாதம் நேற்றும், இன்றும் நடைபெறுகிறது. இந்த விவாதத்துக்கு பிரதமர் மோடி நாளை பதிலளித்து பேசிவார் என தெரிகிறது.

நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று பேசினார். நீதிமன்ற உத்தரவுப்படி, தகுதி நீக்க உத்தரவு ரத்தாகியுள்ளதால் மீண்டும் அவைக்கு வந்துள்ள ராகுல் காந்தியின் பேச்சு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இன்று பேசினார். அப்போது, அதானி என்ற வார்த்தையை ராகுல் காந்தி பயன்படுத்த தொடங்கிய உடனேயே பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அதானி பற்றி பேச மாட்டேன்; எனவே, நான் பேசுவதை கேட்டு நீங்கள் அச்சப்பட வேண்டாம் ராகுல் காந்தி பதிலளித்தார்.

பிரபல பாரசீக கவிஞர் ரூமியை மேற்கோள் காட்டி பேசிய ராகுல் காந்தி, ‘நான் இன்று என் மனதில் இருந்து பேச விரும்புகிறேன். எப்போதும் போல் இன்று அரசாங்கத்தை கடுமையாக தாக்கி பேசப்போவதில்லை.’ என்றார்.

மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடியை தாக்கி பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “நான் மணிப்பூர் சென்றேன். பிரதமர் மோடி ஒரு முறை கூட அங்கு செல்லவில்லை. பிரதமர் மோடி மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாக கருதவில்லை. மணிப்பூரை பிரதமர் மோடி இரண்டாக பிரித்துள்ளார். தொடர் வன்முறை சம்பவங்களால் மணிப்பூர் இன்று பிரிந்து நிற்கிறது” என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

ஊழலைப் பற்றி பேசும்போது உங்களது கூட்டணியில் இருக்கும் திமுகவை பாருங்கள்: ராகுலுக்கு ஸ்மிருதி இராணி பதிலடி!

எனது ஒரு அம்மா இங்கே எனது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஆனால் எனது இன்னொரு தாயை மணிப்பூரில் நீங்கள் கொன்று விட்டீர்கள் என தெரிவித்த ராகுல் காந்தி, “இந்தியா நமது மக்களின் குரல். மணிப்பூரில் அந்தக் குரலைக் கொன்றீர்கள். மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றீர்கள். நீங்கள் மணிப்பூர் மக்களை கொன்றீர்கள். இந்தியாவை கொன்றீர்கள். நீங்கள் துரோகிகள். நீங்கள் தேசபக்தர்கள் இல்லை.” என ஆவேசமாக பேசினார்.

நீங்கள் முழு நாட்டையும் நெருப்பில் ஆழ்த்துகிறீர்கள். முதலில் மணிப்பூர், இப்போது ஹரியானா என நீங்கள் முழு நாட்டையும் எரிக்க விரும்புகிறீர்கள். இலங்கை ஹனுமனால் எரிக்கப்படவில்லை, ராவணனின் ஆணவத்தால் எரிக்கப்பட்டது. ராவணன் ராமனால் கொல்லப்படவில்லை, அவனது ஆணவத்தால் கொல்லப்பட்டான் எனவும் ராகுல் காந்தி பேசினார்.

ராவணன் மேகநாத் மற்றும் கும்பகர்ணன் ஆகிய 2 பேரின் பேச்சைக் கேட்பான். அதேபோல், பிரதமர் மோடி அமித் ஷா மற்றும் அதானி என 2 பேர் சொல்வதை கேட்கிறார் என ராகுல் காந்தி மக்களவையில் கடுமையாக தாக்கி பேசினார்.