உத்தரப்பிரதேசத்தில் உள்ள உலக இந்து அமைப்பு மற்றும் இந்து யுவ வாகனி ஆகிய அமைப்புகள் சட்டத்தை கையில் எடுத்து செயல்படக்கூடாது என்று முதல்வர் ஆதித்யநாத்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வர் ஆதித்தயநாத்தால் உருவாக்கப்பட்டது, இந்து யுவ வாகனி, உலக இந்து அமைப்பு. முதல்வராக ஆதித்யநாத் பதவி ஏற்றபின், ஆன்ட்டி ரோமியோ படை, பசுபாதுகாவலர்கள் என்ற பெயரில் அப்பாவிகளை அடித்து துன்புறுத்துவது, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குவது போன்ற சம்பவங்களில் இந்த அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் ஈடுபட்டு வந்ததாக புகார் எழுந்தன. இது தொடர்பாக ஆதாரங்களையும் வெளியிட்டு நாளேடுகளில் செய்தி வெளியானது.

மீரட் நகரில் சமீபத்தில் ஒரு தம்பதியினரை இந்து யுவ வாகனி அமைப்பினர் தாக்கினர், ஒரு வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்து ஆண் ஒருவரை தாக்கினர் என புகார்கள் பல எழுந்தனர்.

இதையடுத்து, இந்த இரு அமைப்புகளின் பொறுப்பாளர்களையும் அழைத்து எச்சரித்த முதல்வர் யோகி ஆதித்தயநாத், “ சட்டம் அனைவருக்கும் ஒன்று தான், என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சட்டத்தை கையில் எடுத்து செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இந்த இரு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், முதலவர் ஆதித்யநாத் அரசின் திட்டங்களையும், நடவடிக்கைகளையும் மக்கள் மத்தியில் பரப்ப முடிவு செய்துள்ளனர். மேலும், இந்த இரு அமைப்புகளிலும் புதிய உறுப்பினர்கள் யாரும் இப்போது சேர்க்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்துஇந்து யுவவாகின் அமைப்பின் தலைவர் ஒருவர் கூறுகையில், “முதல்வர் யோகி மகராஜை(ஆதித்யநாத்) முதன்முதலாகப் பார்த்தபோது, சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். எச்சரிக்கையாகச் செயல்படுங்கள். ஏற்கனவே உங்களுக்கு கூறிவிட்டேன் என்று எச்சரித்தார்’’ எனத் தெரிவித்தார்.