அரசிடம் ஊதியம் பெற்றுக்கொண்டு பள்ளிக்கூடங்களுக்குச் செல்லாத ஆசிரியர்களின் புகைப்படங்களை சுவற்றில் ஒட்டி அசிங்கப்படுத்துங்கள் என்று மாணவர்களுக்கு முதல்வர் ஆதித்யநாத் ஆலோசனை வழங்கியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் முதல்வராக ஆதித்யநாத் பொறுப்பு ஏற்றதில் இருந்து தனது வித்தியாசமான நடவடிக்கைகளால் மக்களை கவர்ந்து வருகிறார். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, பெண்கள் பாதுகாப்புக்கு ஆன்ட்டி ரோமியோ படை, அரசு அலுவலர்களுக்கு ஒழுக்க நெறிகள் என புதிய புதிய உத்தரவுகளை முதல்வர் பிறப்பித்து வருகிறார்.

அதேசமயம், மாநிலத்தின் கல்வித்தரம் மிகவும் மோசமாக இருப்பதைக் கண்டு சமீபத்தில் யோகி ஆதித்யநாத், வேதனை தெரிவித்து இருந்தார். இதையடுத்து, தலைவர்களின் பிறந்த, இறந்த நாட்களுக்கு வழங்கப்பட்டு வந்த விடுமுறை நாட்களை ரத்து செய்து, பள்ளி வேலைநாட்களை அதிகரித்து ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

இந்நிலையில், கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில், அரசிடம் ஊதியம் பெற்றுக்கொண்டு பள்ளிக்கு வராமல் இருக்கும் ஏராளமான ஆசிரியர்கள் பக்கம் தனது கவனத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் திருப்பியுள்ளார்.

கோரக்பூர் தொகுதிக்கு நேற்றுமுன்தினம் சென்ற ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு நீண்ட உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதன்படி, அனைத்துப் பள்ளிகளுக்கும் ஆசிரியர்கள் ஒழுங்காக வருகிறார்களா? என்பதை அதிகாரிகள் கண்காணிப்பதோடு, மாணவர்களும் கண்காணிக்க வேண்டும் என ஆதியநாத் புதிவித யோசனை தெரிவித்துள்ளார்.

சில ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து கையெப்பம் மட்டும் போட்டுவிட்டு, சென்று விடுவார்கள் அந்த ஆசிரியர்களை அடையாளம் கண்டு, அவர்களின் புகைப்படத்தை அனைவரும் அறியும்படி, பொதுச் சுவற்றில் ஒட்டி அசிங்கப்படுத்த வேண்டும் என மாணவர்களை  முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடக்கப்பள்ளிகள் முதல், உயர்நிலைப்பள்ளிகள் வரை ஆசிரியர்கள் ஒழுங்காக வருகிறீர்களா என்பதை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல், சந்தேகப்படும் ஆசிரியர்கள் குறித்து மாணவர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்.

அரசியம் ஊதியம் பெற்றுக்கொண்டு ஏமாற்றும் ஆசிரியர்களைக் கண்டு பொறுமையாக இருக்க முடியாது. கடினமான முடிவுகள் மூலமே கல்வியின் தரத்தை உயர்த்த முடியும் என முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.