கோரக்பூர் மருத்துவமனையில் பலியான 70-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வந்தார்.

அது குறித்து பேசிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், “டெல்லியில் இளவரசர் அமர்ந்துள்ளார், அவர் கோராக்பூர் வந்து சுற்றுப் பார்க்க அது சுற்றுலாத்தளம் அல்ல. அதை அனுமதிக்க முடியாது’’ என்று அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தில் பி.ஆர்.டி. அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள குழந்தைகள் நலப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த குழந்தைகள் கடந்த வாரம் அடுத்தடுத்த நாட்களில் திடீரென இறந்தனர். 3 நாட்களில் 71 குழந்தைகள் பலியானார்கள்.

அந்த குழந்தைகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்துக்கு நிலுவை பணம் வழங்காததால், அவர்கள் சிலிண்டர் சப்ளை செய்யவில்லை இதனால், குழந்ைதகள் இறந்தனர் எனக் கூறப்பட்டது. ஆனால், இதை மறுத்த மாநில அரசு, மூளை அழற்ச்சி நோயால்தான் குழந்தைகள் இறந்தனர் எனத் தெரிவித்தது.

இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உடனடியாக முதல்வர்பதவியில் இருந்து, ஆதித்யநாத் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில், உயிரிழந்த 71 குழந்தைகளின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி அங்கு சென்றார்.

இதற்கிடையே கோரக்பூரில், ‘தூய்மை உத்தரப்பிரதேசம்-சுகாதார உத்தரப்பிரதேசம்’ என்ற பிரசாரத்தை முதல்வர் ஆதித்யநாத் நேற்று தொடங்கி வைத்தார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது-

லக்னோவில் ஒரு இளவரசர் அமர்ந்து இருக்கிறார்(சமாஜ்வாதி கட்சி தலைவர அகிலேஷ்யாதவ்). டெல்லியில் ஒரு இளவரசர்(ராகுல்காந்தி) அமர்ந்து இருக்கிறார். இருவருக்கும் சுகாதாரம் என்றால் எனத் தெரியாது, அதன் முக்கியத்துவத்தையும், பிரசாரத்தையும் உணரமாட்டார்கள். கோரக்பூர் மருத்துவமனையில் உள்ள குழந்தைகளைவந்து சந்தித்து, இந்த இடத்தை ஒரு சுற்றுலாத்தளமாக மாற்ற நினைக்கிறார்கள், இதை நான் அனுமதிக்கமாட்டேன்.

கோரக்பூர், உ.பி.யின் கிழக்குப்பகுதி மக்களின் சுய கவுரம் குறித்து யாரேனும் வெளிப்படையாக சவால்விட்டால், அவர்கள் துணிச்சலாக வௌியே வந்து இந்த மூளை அழற்ச்சி நோய்க்கு எதிராக சண்டையிடுங்கள், விழிப்புணர்வு பிரசாரம் செய்யுங்கள்  பார்க்கலாம்.

நான் தொடங்கி வைக்கும் இந்த பிரசாரம் வெற்றிகரமாக மூளை அழற்ச்சி நோயை ஒழிக்கும். இதற்கு முன் மாநிலத்தை ஆண்ட அரசுகள், மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளை செய்து கொடுக்காமல், நலன்களை புறக்கணித்து ஏமாற்றிவிட்டனர்.

இவ்வாறு அவர் பேசினார்.