12 வயதான ருத்வி, ஒரு நிமிடத்தில் 10 யோகா ஆசனங்களைச் செய்து உலக சாதனை படைத்துள்ளார். சர்வதேச யோகா தினத்தன்று இந்த சாதனையை நிகழ்த்திய ருத்வி, யோகா பயிற்சி தனது கவனத்தையும் நிதானத்தையும் மேம்படுத்துவதாகக் கூறுகிறார்.
தனது அபாரமான யோகா திறமையால் அனைவரையும் வியக்க வைத்துள்ளார் 12 வயதான சிறுமி ருத்வி. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இளம் யோகா வீராங்கனை, ஒரு நிமிடத்தில் 10 கடினமான யோகா ஆசனங்களைச் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
சர்வதேச யோகா தினமான ஜூன் 21 அன்று இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். தனது சாதனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ருத்வி, யோகா பயிற்சி செய்வது நிதானமாக செயல்படவும் படிப்பில் அதிக கவனம் செலுத்தவும் உதவுவதாகத் தெரிவித்தார். சர்வதேச யோகா சாம்பியனாக வருவது தனது கனவு என்றும் அவர் கூறினார்.
யோகா போட்டிகளில் ருத்வி:
தனது யோகா பயணம் குறித்து ருத்வி கூறுகையில், பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு (SGFI) சார்பில் தேசிய அளவில் கர்நாடக மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தியதாகவும், வெறும் 1.5 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லை இழந்ததாகவும் தெரிவித்தார்.
யோகா ஓபன் மாநில சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல போட்டிகளிலும் ருத்வி பங்கேற்றுள்ளார். ருத்வி கடினமான ஆசனங்களை சாதாரணமாகச் செய்யும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. ருத்வியின் திறமையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
