கர்நாடக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியதை அடுத்து இன்று மாலை 6 மணிக்கு 4-வது முறையாக முதல்வராக எடியூரப்பா பதவியேற்க உள்ளார். 

கர்நாடகாவில், குமாரசாமி தலைமையில், மதச்சார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, கடந்த, 14 மாதங்களாக நடைபெற்று வந்தது. இம்மாத தொடக்கத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த, 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது.  

பின்னர், சட்டப்பேரவையில் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். 6 நாட்கள் நடத்த விவாதத்துக்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் ஆதரவாக 99 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இதையடுத்து, ஆட்சியமைக்கும் முயற்சியில் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான எடியூரப்பா (76) ஈடுபட்டார். இது தொடர்பாக, கட்சி தலைமையின் உத்தரவுக்கு காத்திருப்பதாகவும் உத்தரவு கிடைத்த பின்னர் ஆளுநரை சந்திப்பேன் என்றார். இதனிடையே, நேற்று, சுயேட்சை மற்றும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி காட்டினார். 

இந்நிலையில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் எதிர்கட்சித் தலைவர் எடியூரப்பா இன்று உரிமை கோரினார். இதையடுத்து ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு எடியூரப்பா 4-வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். மேலும், ஒரு வாரத்துக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க கர்நாடக ஆளுநர் கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.