தலைநகரை மிரட்டி வரும் யமுனை நதி; 207.55 மீட்டராக நீர்மட்டம் உயர்வு; வெள்ள பாதிப்பு இடங்களில் 144 தடையுத்தரவு!
இமாசலப் பிரதேசம், டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்குப் பின்னர் மிக கன மழை பெய்து எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கும் யமுனை நதியின் வெள்ளம் டெல்லி நகருக்குள் செல்லும் ஆபத்து இருப்பதால் மக்கள் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்தைக் கூறியுள்ளார். யமுனை நதியின் நீர்மட்டம் இதுவரை இல்லாத அளவிற்கு 207.55 மீட்டராக பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 1978ஆம் ஆண்டில் நீர்மட்டம் 207.49 மீட்டராக பதிவாகி இருந்தது.
டெல்லியில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கும் இடங்களில் போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். மத்திய வாட்டர் கமிஷன் வெளியிட்டு இருக்கும் தகவலில் இன்று அதிகாலை 4 மணிக்கு நீர்மட்டம் 207 மீட்டராக பதிவாகி இருந்தது என்று தெரிவித்துள்ளனர். 2013க்குப் பின்னர் முதன் முறையாக இந்தளவிற்கு வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து இன்று காலை 8 மணிக்கு 207.25 மீட்டராக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மோசமான வானிலை.. சாலைகள் துண்டிப்பு.. ஆன்லைனில் திருமணம் செய்த ஜோடி.. எங்கு தெரியுமா?
மேல் நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், டெல்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் வார இறுதியில் பெய்த கனமழையாலும் நீர் மட்டம் கடுமையாக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மக்கள் மீட்புப் பணிகளுக்காக 45 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஓக்லா குறுக்கு அணை திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. யமுனையில் இருந்து வெளியேறும் நீர் ரிங் ரோட்டிற்குள் புகுந்து செல்வதால் மணல் பைகள் அடுக்கப்பட்டுள்ளன. யமுனை நதியை ஒட்டி இருக்கும் அனைத்து காவல் நிலையங்களிலும் போலீசாருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்களுக்கு அவ்வப்போது எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், டெல்லியில் இன்று, புதன்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மற்றும் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் அதிக மழை பெய்தால் யமுனையில் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும். இது நிர்வாகத்திற்கு சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. டெல்லியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் கட்டிடம் மற்றும் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.