இந்தியாவின் மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக நல்ல லாபம் ஈட்டி வருகிறது. மேலும், விரைவில் கடன் இல்லா நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவாகும் என சமீபத்தில் முகேஷ் அம்பானி உறுதி அளித்து இருந்தார். இதனால் சமீபகாலமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை ஏற்றம் கண்டு வருகிறது.

பங்குச் சந்தை வரலாற்றில் ரூ.10 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டிய முதல் நிறுவனம் என்ற சாதனையை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நேற்று நிகழ்த்தியது. 

பங்குகளின் சந்தை மதிப்பு உயர்ந்ததால் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 6,050 கோடி டாலராக ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.24 லட்சம் கோடி) உயர்ந்தது. 

இதனையடுத்து நேற்று உலக மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் கூகுள் நிறுவனர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பெரின் ஆகியோரை பின்னுக்கு தள்ளி முகேஷ் அம்பானி 9வது இடத்துக்கு முன்னேறினார். போர்ப்ஸ் பத்திரிகை இந்த தகவலை தெரிவித்துள்ளது.

போர்ப்ஸ் உலக மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பிசோஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 

அதற்கு அடுத்து பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் குடும்பத்தினர், பில் கேட்ஸ், வாரன் பபெட், மார்க் ஜூக்கர்பெர்க், லாரி எலிசன், அமன்சியோ ஒர்டேகா, கார்லோஸ் ஸ்லிம் ஹெலு மற்றும் குடும்பத்தினர், முகேஷ் அம்பானி மற்றும் லாரி பேஜ் ஆகியோர் முறை 2 முதல் 10 இடங்களில் உள்ளனர்.