புதுச்சேரியில் நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் மறுநாள் காலை வரை சுமார் 8 மணி நேரம் கொட்டித்தீர்த்தது. இதனால் புதுச்சேரியின் பெரும் பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. சாலைகள் அனைத்தும் வெள்ளப்பெருக்கால் பெரும் சேதமடைந்தது. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதை எல்லாம் விட மிகப்பெரிய அதிர்ச்சியாக பெண் ஒருவர் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். 

புதுச்சேரி சண்முகாபுரத்தை அடுத்த வடக்கு பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார், இவருடைய மனைவி ஹசீனா பேகம். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அதேபகுதியில் வியாபாரம் செய்து வரும் ஹசீனா பேகம்,  கோட்டைப் பகுதியில் இருக்கும் ஓடையில் தனது ஸ்கூட்டியை நிறுத்துவது வழக்கம். மறுநாள் காலையில் கனமழையால் கோட்டை பகுதி ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. எனவே தன்னுடைய வாகனத்தை வேறு இடத்தில் மாற்றி நிறுத்த ஹசீனா முடிவெடுத்துள்ளார். 

வெள்ள நீரின் வேகத்தில் இருசக்கர வாகனம் இழுக்கப்பட்டுள்ளது, அத்துடன் சேர்ந்து ஹசீனாவும் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். ஹசீனாவின் கூக்குரலைக் கேட்டு அப்பகுதி மக்கள் அவரை காப்பாற்ற முயன்றனர், ஆனால் வெள்ளத்தின் வேகத்தில் ஹசீனா இழுத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தேடல் பணிகளை துரிதப்படுத்தினர். இதனிடையே கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பின்புறமுள்ள கனகன் ஏரியில் ஹசீனா பேகம் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.