ராப் பாடகர் வேடன் மீது இளம்பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் புகார் அளித்துள்ளார்.
சாதாரணமாக ராப் பாடல்களை எழுதி, பாடி யூடியூபில் பதிவிட்டு இந்திய அளவில் பெரிய ரசிகர் கூட்டத்தையே வேடன் உருவாக்கி வைத்துள்ளார். குறிப்பாக வேடன் தனது இசை மூலம் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக தொடர்ந்து கொண்டாடப்படுகிறார். 2020-ல் வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ் மூலம் புகழ் பெற்ற இவர். 2024-ல் “மஞ்சும்மல் பாய்ஸ்” படத்தில் “குத்தந்திரம்” பாடலை எழுதி பாடினார். தற்போது, விஜய் மில்டன் இயக்கும் தமிழ்-தெலுங்கு படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
ராப் இசை பாடகர் வேடன் மீது பாலியல் புகார்
இந்நிலையில், கொச்சி திருக்காக்கரா காவல் நிலையத்தில் இளம்பெண் மருத்துவர் ஒருவர் ராப் இசை பாடகர் வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பணம் பெற்றதாகவும், திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த பெண் புகார் அளித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை வழக்கு
இந்த புகாரின் பேரில் கொச்சி திருக்காக்கரா போலீசார் வேடன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் மீதான குற்றம் உறுதியாகும் பட்சத்தில் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இரண்டு முறை கைதாகி ஜாமீனில் வந்தவர்
இவரது வீட்டில் 6 கிராம் கஞ்சா வழக்கிலும், வனவிலங்கு பல் அணிந்ததாக கூறப்படும் மற்றொரு வழக்கில் அவர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
