கடந்த 7 மாதத்தில் மட்டும் காஷ்மீர் மாநிலத்தில் 70 இளைஞர்கள் தீவிரவாத அமைப்புக்களில் சேர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் முஜாஹூதீன் தீவிரவாதி புர்ஹான் வானி கடந்த ஜூலை மாதத்தில் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிறகு தீவிரவாத வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 70 இளைஞர்கள் தீவிரவாத அமைப்புக்களில் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக புல்வானா , சோபியான் மற்றும் குல்காம் மாவட்டங்களில் இளைஞர்கள் தீவிரவாத அமைப்புக்களில் அதிக அளவில் சேர்ந்துவருவது தெரியவந்துள்ளது.

கடந்த 2014- ஆண்டு முதல் தீவிரவாத அமைப்புக்களில் சேருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2016-ம் ஆண்டு தீவிரவாத அமைப்புக்களில் 88 பேர் சேர்ந்திருந்தனர். 2014-ல் 53 பேரும் 2015-ம் ஆண்டு 66 பேரும் தீவிரவாத இயக்கங்களில் சேர்ந்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வானா,சோபியான் மற்றும் குல்காம் மாவட்டங்கள் தீவிரவாத அமைப்புக்களின் புகலிடங்களாக மாறி வருகின்றன.

சமீபகாலமாக புல்வானா மாவட்டம் தீவிரவாதிகளின் பதுங்குமிடமாக வேகமாக மாறிவருகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள பழத்தோட்டங்கள் மற்றும் நிறைந்துகிடக்கும் காடுகள் தீவிரவாத செயல்பாடுகளுக்கு சாதகமாக உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இளைஞர்கள் தீவிரவாத அமைப்புக்களில் சேருவதை தடுப்பதற்காக ராணுவத்தினர் பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த வருடம் மட்டும் தீவிரவாத இயக்கங்களில் சேர முயற்சித்த 54 இளைஞர்களை ராணுவம் தடுத்து நிறுத்தியுள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 7 மாதங்களில் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதல்களில் 132 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.