மத்திய அரசு 'பாரத் டாக்ஸி' என்ற புதிய கூட்டுறவு ஆன்லைன் கேப் சேவையை அறிமுகப்படுத்துகிறது. சர்ஜ் பிரைசிங் இல்லாத இந்த சேவை, வெளிப்படையான கட்டணங்கள் மூலம் பயணிகளுக்கும், உரிமையாளர் ஆகும் வாய்ப்பால் ஓட்டுநர்களுக்கும் பயனளிக்கும்.
ஆன்லைன் டாக்ஸி சேவைகளில் தற்போது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. அதற்காக, கூட்டுறவு முறை முழுவதும் உருவாக்கப்பட்டுள்ள புதிய கேப் சேவையான ‘பாரத் டாக்ஸி’ விரைவில் நாடு அறிமுகமாக உள்ளது. மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் மேற்பார்வையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் முன்னோட்டக் கட்டம் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. டெல்லி–என்சிஆர் பகுதியில் மட்டும் 1.10 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுநர்கள் இணைந்திருப்பது, இந்த திட்டத்தின் மீது நம்பிக்கையை காட்டுகிறது.
பாரத் டாக்ஸி என்பது பொதுமக்களின் தினசரி பயணத் தேவைகளை எளிதாக்குவதற்காக மொபைல் அடிப்படையிலான கேப் முன்பதிவு செயலி ஆகும். இந்த செயலியின் மூலம் ஆட்டோ, கார் மற்றும் பைக் டாக்ஸிகளை ஒரே இடத்தில் முன்பதிவு செய்யலாம். நாட்டின் முதல் தேசிய மொபிலிட்டி கூட்டுறவு அமைப்பான ‘சககார் டாக்ஸி கோஆபரேட்டிவ் லிமிடெட்’ மூலம் இந்த சேவை இயக்கப்படுகிறது. இதில் ஓட்டுநர்களின் நலனே முதன்மையாக கருதப்படும் ஓட்டுநர்-நட்பு மாதிரி பின்பற்றப்படுகிறது.
இந்த திட்டத்தில் இணையும் ஓட்டுநர்களுக்கு அரசே டாக்ஸி வாங்க உதவி வழங்கும் ஏற்பாடு உள்ளது. இதனால், ஓட்டுநர்கள் வெறும் சேவை வழங்குபவர்களாக மட்டுமல்லாமல், டாக்ஸி உரிமையாளர்களாகவும் மாற வாய்ப்பு கிடைக்கும். இது நாடு முழுவதும் பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சுய தொழில் செய்ய விரும்புவோருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.
பாரத் டாக்ஸியின் மிக முக்கியமான சிறப்பம்சம் ‘சர்ஜ் பிரைசிங்’ இல்லாதது. மழை, போக்குவரத்து நெரிசல் அல்லது பீக் ஹவர் நேரங்களில் கூட கட்டணம் தன்னிச்சையாக உயர்த்தப்படாது. பயண கட்டணம் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டு, முழுமையாக வெளிப்படையாக இருக்கும். இதனால் பயணிகள் செலவு குறித்து குழப்பம் இல்லாமல் பயணம் செய்ய முடியும்.
பாதுகாப்பு அம்சங்களிலும் பாரத் டாக்ஸி சிறப்பு கவனம் செலுத்துகிறது. பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் பாதுகாப்பிற்காக டெல்லி மற்றும் குஜராத்தில் உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து செயல்படுகின்றனர். லைவ் டிராக்கிங், சரிபார்க்கப்பட்ட ஓட்டுநர்கள், பன்மொழி ஆதரவு, 24×7 வாடிக்கையாளர் சேவை போன்ற வசதிகள் செயலியில் இடம்பெறும். மேலும், மெட்ரோ நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டதால், பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒரே செயலியில் திட்டமிடலாம்.
தற்போது, பாரத் டாக்ஸி செயலி சோதனை பயன்பாட்டுக்காக Google Play Store-ல் கிடைக்கிறது; iOS பதிப்பு விரைவில் வெளியாகும். 2026 ஜனவரி முதல் டெல்லியில் பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தலாம். அதன் பின்னர் குஜராத் உள்ளிட்ட பல நகரங்களுக்கு விரிவடைய திட்டமிடப்பட்டுள்ளது. ஆன்லைன் டாக்ஸி சந்தையில், அரசு கொண்டு வரும் இந்த முயற்சி ஒரு புதிய காலத்தை தொடங்கும் என பார்க்கப்படுகிறது.


