தெலங்கானாவில் ஏற்கனவே 27 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்ட நிலையில், விரைவில் 84 ஆயிரம் புதியவேலை வாய்ப்புகள் இளைஞர்களுக்கு உருவாக்கப்பட உள்ளது என்று தெலங்கானா முதல்வர் கே.சி. சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.

ஐதராபாத்தில் நடந்த 71-வது சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில், தேசியக் கொடி ஏற்றிவைத்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசியதாவது-

தனியாக தெலங்கானா மாநிலம், உருவாக்கும் கோரிக்கையை முன்வைக்கும் போது, ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்று உறுதியளித்தோம். அதன்படி, இப்போது வரை 1.26 லட்சம் வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு உருவாக்கி கொடுத்து இருக்கிறோம். அடுத்ததாக கூடுதலாக 84 ஆயிரத்து 876 வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த வேலை வாய்ப்புகள் அனைத்தும் அ ரசுதுறைகளில், இளைஞர்களுக்காக உருவாக்கப்படும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் மாநிலத்துக்கு ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு வந்துள்ளது, 4 ஆயிரத்து 118 தொழிற்சாலைகள் புதிதாக உதயமாகியுள்ளன, 2.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

விரைவில் மாநிலத்தில் சர்வதேச அளவிலான தொழில்முனைவோர்கள் மாநாடு நடத்த உள்ளோம். அதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரின் மகள் இவாங்கா டிரம்ப் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். குறுகிய காலத்தில் தடைகளை எல்லாம் தாண்டி தெலங்கானா மாநிலம் வளர்ச்சி நோக்கி செல்கிறது

இவ்வாறு அவர் தெரிவித்தார்.