ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் மாவட்டத்தின் ஒரு பஞ்சாயத்து, சமூக ஒழுக்கத்தைக் காரணம் காட்டி பெண்களுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்துள்ளது. இது பெண்கள் அமைப்புகள் மத்தியில் பெரும் கண்டனத்தைப் பெற்றுள்ளது.

உலகம் 6G தொழில்நுட்பத்தை நோக்கிப் பாய்ந்துகொண்டிருக்கும் வேளையில், ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு பகுதி கிராமங்கள் மீண்டும் 'கீபேட்' (Keypad) போன் காலத்திற்குத் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் மாவட்டத்தில் உள்ள சுந்தாமாட்டா பட்டி பஞ்சாயத்து, பெண்களுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்துள்ளது.

தடையின் ஏன்?

கடந்த ஞாயிற்றுக்கிழமை காஜிப்பூர் கிராமத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்குச் இரண்டு முக்கியக் காரணங்கள் சொல்லப்படுகின்றன.

பெண்கள் ஸ்மார்ட்போன் வைத்திருப்பதால், குழந்தைகள் அடிக்கடி வீடியோ பார்ப்பதாகவும், இதனால் அவர்களின் கண்பார்வை பாதிக்கப்படுவதாகவும் பஞ்சாயத்து கூறுகிறது.

ஸ்மார்ட்போன் மோகத்தைக் குறைக்கவும், சமூக ஒழுக்கத்தைக் காக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கேமரா போன்களுக்குத் தடை

இந்த உத்தரவு வரும் குடியரசு தினமான ஜனவரி 26, 2026 முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகிறது. பெண்கள் கேமரா இல்லாத சாதாரண கீபேட் போன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

திருமண நிகழ்ச்சிகள், சமூகக் கூடல்கள் அல்லது அண்டை வீடுகளுக்குச் செல்லும் போது பெண்கள் மொபைல் போன் எடுத்துச் செல்லக் கூடாது.

கல்விக்காகப் போன் தேவைப்படும் மாணவிகள் வீட்டின் உள்ளே மட்டும் பயன்படுத்தலாம். ஆனால், அவர்கள் போனை வீட்டை விட்டு வெளியே கொண்டு வரக்கூடாது.

15 கிராமங்களில் கட்டுப்பாடு

இந்த வினோத உத்தரவு காஜிப்பூர், பாவ்லி, கல்டா, ராஜிகாவாஸ், ராஜ்புரா, கோட்டி உள்ளிட்ட 15 கிராமங்களில் வசிக்கும் சவுத்ரி சமூகப் பெண்களுக்குப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் இந்தச் செயலுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தொழில்நுட்பம் மூலம் பெண்களை முன்னேற்ற அரசு முயலும் வேளையில், இத்தகைய பஞ்சாயத்து உத்தரவுகள் பெண்களை மீண்டும் இருண்ட காலத்திற்குக் கொண்டு செல்கின்றன என அவர்கள் விமர்சித்துள்ளனர்.