கலைந்து செல்லவில்லை என்றால் துப்பாக்கியால் சுட்டுருவேன்...! திமுக எம்எல்ஏவை மிரட்டிய எஸ்.பி.!
மறியல் போராட்டத்தின்போது திமுக எம்.எல்.ஏ. ஒருவரை, காவல் துறை எஸ்.பி. துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என்று மிரட்டியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இன்று முழு அடைப்புபோராட்டம் நடத்தி வருகிறது. இந்த போராட்டத்துக்கு புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளன.
புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தின் முன் திமுக தலைமையில் இன்று காலை போராட்டம் நடந்தது. அப்போது பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மறைமலை அடிகள் சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அப்போது, பாஸ்போர்ட் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக கூறி திமுக எம்எல்ஏவின் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்கவாதம் ஏற்பட்டது.
போராட்டத்தல் ஈடுபட்டிருந்த திமுக எம்எல்ஏ சிவாவை, எஸ்.பி. வெங்கடசாமி போராட்டத்தைக் கைவிடவில்லை என்றால் துப்பாக்கியால் சுட்ருவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது. போலீசைக் கண்டித்து அனைத்து கட்சியினரும் அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எம்எல்ஏ சிவாவின் காரை ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்துக்கு எடுத்துக் செல்லப்பட்டது.
இது குறித்து எம்.எல்.ஏ. சிவா கூறும்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நாங்கள் போராடி வருகிறோம். அதன் ஒரு கட்டமாக மத்திய அரசின் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம்.
அப்போது அங்கு வந்த எஸ்.பி. வெங்கடசாமி, எங்களைக் கலைந்து செல்லுமாறு கூறினார். எனது காரையும் பறிமுதல் செய்தார். சட்டப்படி எங்கள் மீது வழக்கு பதியுங்கள். ஆனால் போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று கூறினேன்.
அதற்கு எஸ்.பி. வெங்கடசாமி கலைந்து செல்லவில்லை என்றால் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என்று மிரட்டினார். இந்த சம்பவம் குறித்து எங்களது கட்சி தலைமை என்ன கூறுகிறதோ அதன்படி அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என்று கூறினார்.