மக்களவையில் இருந்து ராகுல் காந்தியை நீக்குவதற்கு சபாநாயருக்கு அதிகாரம் இருக்கிறதா? சட்டம் என்ன சொல்கிறது?
ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், அவரது எம்பி பதவியை சபாநாயகர் பறிக்கலாம் என்று மூத்த அரசு ஆலோசகர் கஞ்சன் குப்தா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மூத்த அரசு ஆலோசகர் கஞ்சன் குப்தா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், ஜூலை 10, 2013-ல் லில்லி தாமஸ்க்கு எதிராக உச்சநீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டி, 'குற்றம் செய்து குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு எம்.பி., எம்.எல்.ஏ அல்லது எம்.எல்.சி.,யாக இருந்தாலும், உடனடியாக சபை உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது பதிவில், "ஜனநாயகத்தில் யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை. அனைவரும் சமம். எனவே, சட்டம், ராகுல் காந்திக்கும் பொருந்தும்" என்று தெரிவித்துள்ளார்.
சட்டம் என்ன சொல்கிறது?
சட்டத்தின்படி, வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து வயநாடு எம்பியை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உரிமை உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 499 மற்றும் 500-ன் கீழ் ராகுல் காந்தியை குற்றவாளி என்று அறிவித்த சூரத் நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கியதுடன், மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் வகையில் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தது. 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டாலும், மேல்முறையீட்டு தீர்ப்பு வரும் வரை தண்டனையை நிறுத்தி வைக்கும் உத்தரவு, உயர் நீதிமன்றத்தில் இருந்து வர வேண்டும். அதுவரை ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு.
ராகுல் காந்தி எம்பி பதவியை இழக்கிறாரா? மேல்முறையீடு செல்ல முடியுமா?
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8வது பிரிவின்படி, ஏதேனும் ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நபர், அத்தகைய குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். மேலும் ஆறு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
ராகுலுக்கு பாஜக நினைவூட்டல்:
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், சரத் யாதவ் போன்ற சில எம்.பி.க்கள், வழக்குகளில் தண்டனை அடிப்படையில் தகுதி நீக்கம் செய்யப்படுவதை இரண்டில் இருந்து ஐந்தாண்டுகளாக மாற்ற வேண்டும் என்று கோரியிருந்ததை ராகுல் காந்திக்கு பாஜக தலைவர் மீனாட்சி லேகி நினைவூட்டினார். மேல்முறையீடு நிலுவையில் இருந்தபோது, குற்றவாளியை தொடர அனுமதிக்கும் அவசரச் சட்டத்தை ராகுல் காந்தி தூக்கி எறிந்தார். அவர், உண்மையில், அவசரச் சட்டம் முட்டாள்தனமானது என்றும், அவரது தனிப்பட்ட கருத்துப்படி, அது கிழித்து எறியப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
பிரதமர் மோடி குறித்த அவதூறு பேச்சு.. ராகுலுக்கு 2 ஆண்டு சிறை - முழு பின்னணி இதுதான்
காங்கிரஸ் ராகுலை பாதுகாக்கிறது
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் இந்த விவகாரம் குறித்து ஆவேசமாக பேசினர்.
புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு தந்திரத்தையும் பயன்படுத்தி ராகுல் காந்தியின் குரலை அடக்குவதற்கு பயந்தவர்கள் முயற்சித்து வருகின்றனர் என்று பிரியங்கா காந்தி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். "என் சகோதரன் ஒருபோதும் பயந்ததில்லை. உண்மை பேசி வாழ்ந்து வருகிறார், தொடர்ந்து உண்மைகளைப் பேசுவார். நாட்டு மக்களின் குரலை தொடர்ந்து எழுப்புவார்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று கூறிய கார்கே, பாஜகவை கடுமையாக சாடியுள்ளார். அவர்கள் ஒரு விரலை மற்றவர்களை நோக்கி நீட்டினால், நான்கு விரல்கள் அவர்களை நோக்கி காட்டப்படுகிறது என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் இந்தியில் பதிவிட்டுள்ள ஒரு ட்வீட்டில், "எல்லோருக்கும் தெரியும், ராகுல் காந்தி ஒரு சர்வாதிகாரிக்கு எதிராக குரல் எழுப்புகிறார். தவறை தவறு என்று கூறும் தைரியம் அவருக்கு இருக்கிறது. இந்த தைரியத்தால் சர்வாதிகாரி திகைத்துப் போயுள்ளார். அவர் சில சமயங்களில் அமலாக்கத்துறை மூலம் மிரட்ட முயற்சிக்கிறார், சில சமயங்களில் போலீஸ் மூலமாகவும், சில சமயங்களில் வழக்கு மூலமாகவும், சில சமயங்களில் தண்டனை மூலமாகவும் மிரட்டுகிறார்'' தெரிவித்துள்ளது.