திசை மாறுகிறாரா கிருஷ்ணசாமி? யாருடன் கூட்டணி?
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ளது. பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எனவே, அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளும் தனித்தனியாக கூட்டணி அமைத்து தேர்தல் களம் காணும் என தெரிகிறது.
அதேசமயம், திமுக கூட்டணி தமிழகத்தில் வலுவாக உள்ளது. ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகள் அப்படியே தொடர்கின்றன. இந்த முறை கூடுதல் இடங்களில் போட்டியிட திமுகவும், கூடுதல் இடங்களை கேட்க கூட்டணி கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. அதேபோல், திமுக கூட்டணியில் இணைய புதிய கட்சிகள் சிலவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.
அந்த வகையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, பாஜக, அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். அதிமுகவை விட பாஜகவுக்குத்தான் அதிகமாக ஆதரவு கருத்துக்களை அவர் தெரிவித்து வந்தார். ஆர்.எஸ்.எஸ். உடன் தாம் கூட்டணி வைத்திருப்பதாகவும் கூறி வந்தார். அந்த அளவுக்கு இந்துத்துவ அமைப்புகள் மீது தீவிர பற்றாளராக இருப்பவர் கிருஷ்ணசாமி.
பாஜக அதிமுக உடனான தனது நெருக்கத்தை பயன்படுத்தி எப்படியாவது தென்காசி மக்களவைத் தொகுதியில் சீட் வாங்கி விட வேண்டும் என அவர் முயற்சித்து வந்தார். பாஜக தன்னை கைவிடாது என்று எண்ணியிருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக தெரிகிறது. தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான ‘ஸ்டார்ட் அப் பிரிவு’ மாநில ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர், ஸ்ரீதர் வேம்புவுக்கும் நெருக்கமானவர் என்பதால், எப்படியும் அவருக்குத்தான் சீட் கிடைக்கும் என அடித்துக் கூறுகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: அஜய் மக்கான் பரபரப்பு குற்றச்சாட்டு!
தேவேந்திர குல வேளாளர் வாக்குகளை வைத்து கிருஷ்ணசாமி அரசியல் செய்து வந்த நிலையில், பெயர் மாற்றத்துக்கு பிறகு, அந்த வாக்குகளை பாஜக அறுவடை செய்து வருகிறது. இதனால், உள்ளுக்குள் விரக்தியடைந்தாலும், பாஜகவை வெளிப்படையாக எதிர்க்காமல் இருந்து வந்தார் கிருஷ்ணசாமி. அதற்கு காரணம் தென்காசி மக்களவைத் தொகுதிதான் என்கிறார்கள்.
தற்போது அந்த தொகுதி கைவிட்டு போகும் நிலையில் இருப்பதால், பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகிறார். தேவேந்திர குல வேளாளர் எனப் பெயர் மாற்றம் செய்துவிட்டு பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்றும் கோரிக்கையையும் நிறைவேற்றாமல் மத்திய அரசு அரசு தவறிழைத்துவிட்டதாக கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சோனியா காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? சொந்தமாக கார் கிடையாது!
பாஜக கைவிட்ட நிலையில், கிருஷ்ணசாமியின் பார்வை திமுக பக்கம் திரும்பியுள்ளதாக கூறுகிறார்கள். பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட அதிமுக கிருஷ்ணசாமியை கூட்டணிக்கு அழைத்துள்ளது. ஆனால், திமுக கூட்டணியில் புதிய தமிழகம் இணைந்து தென்காசி தொகுதியில் போட்டியிட வேண்டும் என கிருஷ்ணசாமியிடம் அவரது கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது. இதனையேற்று அவர் திமுக தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், திமுக கூட்டணியில் கிருஷ்ணசாமியை சேர்க்க திமுக நிர்வாகிகள் பலர் எதிர்ப்புத் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கூறுகையில், “பாஜகவுடன் கூட இல்லை, நான் ஆர்.எஸ்.எஸ்சுடன் கூட்டணி என்று சொன்ன டாக்டர் கிருஷ்ணசாமி, இப்போது திமுக கூட்டணிக்கு வரக்கூடும் என்பது வதந்தி. அவர் மானஸ்தர். ஒரு நாளும் இங்கு வர மாட்டார்.” என தெரிவித்துள்ளார்.