- Home
- இந்தியா
- தவித்த கர்ப்பிணி பெண்.! கதறிய சிறுமி.! கொதித்தெழுந்த உறவினர்கள்...! டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
தவித்த கர்ப்பிணி பெண்.! கதறிய சிறுமி.! கொதித்தெழுந்த உறவினர்கள்...! டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் பல மணிநேரம் சிக்கித் தவித்தனர். கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் என அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்காமல் அவதிப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

குழந்தை குட்டிகளுடன் தவிக்கும் விமான பயணிகள்
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில தினங்களாக நடந்து வரும் காட்சிகள் மனிதாபிமானமற்றவை என்றே சொல்ல வேண்டும். 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், குறிப்பாக இண்டிகோ விமான நிறுவனத்தின் பயணிகள் பல மணி நேரங்களாக விமான நிலையத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களது குரல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.
கதறும் விமான பயணிகள்
“என் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள். காலை 7 மணி முதல் இங்கேயே மாட்டிக் கொண்டிருக்கிறோம். ஒரு அப்டேட் கூட இல்லை, ஒரு மெசேஜ் கூட இல்லை, இண்டிகோவிடமிருந்து எதுவுமே இல்லை” என்று ஒரு இளைஞன் கதறலாகப் பேசும் வீடியோ இதயத்தை உலுக்குகிறது. கர்ப்பிணிப் பெண்ணுடன் பல மணி நேரம் நிற்க வைப்பது, உட்கார இடம் தராமல் தவிக்க விடுவது எந்த அளவுக்கு மனிதத்தன்மையற்றது என்பதை அந்த ஒரு வீடியோவே சொல்லிவிடுகிறது.
இன்னொரு காட்சி இன்னும் வேதனை தருவது. ஒரு தந்தை தன் மகளுக்காக சானிட்டரி பேட் கேட்டுக் கதறுகிறார். “என் மகளுக்கு இப்போது தேவைப்படுகிறது… விமான நிலையத்தில் ஒன்று கூட இல்லையா?” என்று அவர் கேட்கும் குரல் கேட்கும் யாரையும் உலுக்கும். அடிப்படைத் தேவைகள்கூட பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு விமான நிலைய நிர்வாகமும், விமான நிறுவனமும் தோற்றுப் போயிருக்கின்றன.
https://x.com/NewsAlgebraIND/status/1996990338960134332?t=xfcuBdSXdAcuJeGnTQclQQ&s=08
எப்படி உலகத் தரம் வாய்ந்தது என்று சொல்ல முடியும்?
விமானங்கள் ரத்தாகும்போது மாற்று ஏற்பாடு, ஹோட்டல் தங்குமிடம், உணவு, மருத்துவ உதவி போன்றவற்றை உடனடியாக செய்ய வேண்டியது விமான நிறுவனத்தின் பொறுப்பு. ஆனால் இங்கே அந்தப் பொறுப்பு முழுவதுமாக காற்றில் பறந்து விட்டதுபோல தெரிகிறது. டெல்லி விமான நிலையம் இந்தியாவின் முகம். உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இங்கு வந்திறங்குகிறார்கள். இப்படியொரு அவல நிலையை அவர்கள் பார்த்தால் நம் நாட்டைப் பற்றி என்ன நினைப்பார்கள்? ஒரு கர்ப்பிணிப் பெண்ணையும், மாதவிடாய் நேரத்தில் தவிக்கும் சிறுமியையும் கூட மதிக்கத் தெரியாத அமைப்பு எப்படி உலகத் தரம் வாய்ந்தது என்று சொல்ல முடியும்?

