மோடி அரசு குறித்து ஜாக் டோர்சியின் விமர்சனம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் திட்டமா?
ட்விட்டர் முன்னாள் தலைவர் ஜாக் டோர்சி இந்திய ஜனநாயகம் குறித்து கேள்வி எழுப்பியதன் பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார திட்டம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜாக் டோர்சி, 2021ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது அரசு தங்களுக்கு பல முறை அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அவரது கருத்துகளை அப்படியே பரப்பி வருவது குறித்து வலதுசாரி ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
டோர்சியின் விமர்சனத்துக்கு பதில் கூறியுள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இடை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், அதனை அப்பட்டமான பொய் என்று மறுத்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்திற்கு ஜாக் டோர்சி தலைமை வகித்தபோது அவரும் அவரது குழுவினரும் இந்திய சட்டத்தை தொடர்ந்து மீறினர் என்றும் தவறான தகவல்களை நீக்குவதில் ட்விட்டர் பாரபட்சமாக நடந்துகொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பரவிவரும் ஜாக் டோர்சியின் பேட்டி ஒன்றில், அவர் இந்தியாவில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது, இந்திய அரசு தங்களுக்கு நெருக்கடி கொடுத்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார். "விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகப் பதிவிட்ட கணக்குகளை முடக்க பலமுறை அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள ட்விட்டர் அலுவலகங்களை மூடிவிடுவோம் என்றும், ஊழியர்கள் வீடுகளில் ரெய்டு நடத்துவோம் என்றும் எச்சரித்தார்கள். இதெல்லாம் ஜனநாயக நாடு என்று சொல்லப்படும் இந்தியாவில் நடக்கிறது" என்று ஜாக் டோர்சி கூறியுள்ளார்.
அவரது பேச்சை காங்கிரஸ் கட்சியினரும் இடதுசாரிகளும் பிற வலதுசாரி எதிர்ப்பாளர்களும் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், உலக வங்கி, ஐஎம்எஃப், மோர்கன் ஸ்டான்லி போன்ற நிறுவனங்கள் இந்தியப் பொருளாதாரச் செயல்பாடுகளைப் பற்றி சிறப்பாகப் பேசும்போது, காங்கிரஸும் இடதுசாரிகளும் அதை நம்ப மறுக்கின்றன. ஆனால், பிபிசியோ, ஜாக் டோர்சியோ, டாம் டிக் ஹாரியோ இந்தியாவுக்கு எதிராக ஏதாவது சொன்னால், அதை காங்கிரஸ் கொண்டாடுகிறது, அதனைப் பரப்புகிறது. இது ஏன்? என்ற கேள்வியை நெட்டிசன்கள் முன்வைக்கின்றனர்.
2016 அமெரிக்க தேர்தலின்போது ஜாக் டோர்சியின் கீழ் செயல்பட்ட ட்விட்டர் நிறுவனம் ஜோ பைடனுக்கு எதிரான பதிவுகளை நீக்கியது; ஆனால் டொனால்டு டிரம்ப்க்கு எதிரான தவறான பிரச்சாரத்திற்கு அப்படி எதுவும் செய்யவில்லை என்று ட்விட்டரில் நெட்டிசன்கள் கருத்து கூறுகின்றனர். தேர்தலை முன்னிட்டு அமெரிக்காவில் ட்விட்டரை இவ்வாறு செயல்பட வைத்த ஜாக் டோர்சி, இந்தியாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள சூழலில் மோடி அரசு மீது விமர்சனங்களை முன்வைத்திருப்பது குறித்து வலதுசாரியினர் சந்தேகத்தைக் கிளப்புகின்றனர்.
"இத்தனை மாதங்களாக ஜாக் டோர்சி ஏன் பேசவில்லை? ராகுல் காந்தி அமெரிக்கா சென்ற பிறகு ஏன் இந்த இந்திய விரோதப் பேச்சு? அவர்களின் சந்திப்பில் என்ன நடந்தது? இது காங்கிரஸை மோசமாக பாதிக்கும்" என்று ஜிதன் கஜாரியா கூறியுள்ளார்.
"பப்பு அமெரிக்காவிற்கு டைம்பாஸ் செய்ய செல்லவில்லை, கடந்த 6-7 நாட்களாக அவர் கண்ணில் படவில்லை. அவர் வெள்ளை மாளிகையில் ரகசிய சந்திப்பில் இருப்பதாவும் பிற இந்திய எதிர்ப்பு சக்திகளுடன் பேசிவருவதாகவும் செய்திகள் உள்ளன. ஜாக் இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா என்று குற்றம் சாட்டுவது யாரையும் ஆச்சரியப்படுத்தாது. இது அவர் ட்விட்டரின் தலைவராக இருந்தபோது அவர் அனுமதித்த கருத்தின் ஒரு பகுதிதான்" என்ற சின்ஹா என்பவர் பதிவிட்டுள்ளார்.