மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன் என நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் போது பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக கடந்த ஜூலை 26 ஆம் தேதி மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை அவைக்கு வரவழைத்து பேச வைப்பதற்காகவே இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் அசாம் மாநில எம்.பி.யுமான கவுரவ் கோகாய் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதம் இன்றும், நாளையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வந்த கவுரவ் கோகாய், அந்த தீர்மானத்தை மக்களவையில் தாக்கல் செய்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி உரையைத் தொடங்குவார் எனக் கூறப்பட்ட நிலையில், கவுரவ் கோகாய் முதல் ஆளாக விவாதத்தை தொடங்கி பேசினார். பிரதமர் மோடியின் மவுன விரதத்தைக் கலைக்கவே நாங்கள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்த அவர், மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

Scroll to load tweet…

தொடர்ந்து பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். “நாட்டின் பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வர மறுக்கிறார். அவரை உள்ளே கொண்டு வருவதற்கே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் நிலை உள்ளது. மணிப்பூரின் சிறுபான்மையினர் இரக்கமின்றி கொல்லப்பட்டுள்ளனர். 143 பேர் பலியாகியுள்ளனர். 65,000 பேர் மாநிலத்தை விட்டு வெளியேறியுள்ளனர். மணிப்பூரின் தெருக்களில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். அம்மாநில முதல்வர் ஆதரவற்றவராக நிற்கிறார். பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வரவில்லை, மணிப்பூர் மாநிலத்துக்கும் செல்லவில்லை. அதேசமயம், இந்தியா கூட்டணி கட்சியினர் அங்கு சென்று என்ன நடந்தது என்று புரிந்து கொண்டனர்.” என டி.ஆர்.பாலு பேசினார்.

மேலும், “ரூ.15 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடும் ஒன்றிய அரசு, மதுரை ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.2000 கோடி கூட ஒதுக்க முடியவில்லை. சட்டமன்றம் நாடாளுமன்றத்தில், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு தவறிவிட்டது. இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்பதில் பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டது. இலங்கை அரசியல் சட்டத்தில் 13ஆவது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஒவ்வோருவருக்கும் ரூ.15 லட்சம் வழங்குவோம், வேலை வாய்ப்பு, உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை.” என்றும் டி.ஆர்.பாலு அப்போது பேசினார்.

இரண்டு மணிப்பூர்களை உருவாக்கிய மத்திய அரசு: கவுரவ் கோகாய் குற்றச்சாட்டு!

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுகதா ராய் பேசுகையில், “இந்த அரசு இதயமற்ற அரசு. மேற்கு வங்காளத்திற்கு எந்த கோரிக்கையின் பேரிலும் தூதுக்குழுவை அனுப்புகிறார்கள். ஆனால் நமது சகோதர சகோதரிகள் இறந்து கொண்டிருக்கும் மணிப்பூருக்கு ஒரு தூதுக்குழு கூட செல்லவில்லை. உங்களுக்கு இரக்கம் இல்லை. மற்ற கட்சிகளைப் போல நீங்கள் மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை.” என கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பாஜக சார்பில் நிஷிகாந்த் துபே முதல் ஆளாக பேசினார். அப்போது பேசிய அவர், “இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஏழை தாயின் மகனுக்கு எதிராக, மக்களுக்கு வீடு, குடிநீர், கழிவறைகளை வழங்கியவருக்கு எதிரானது. இது ஏழைகளுக்கு எதிரானது.” என்று பேசினார்.