இரண்டு மணிப்பூர்களை உருவாக்கிய மத்திய அரசு: கவுரவ் கோகாய் குற்றச்சாட்டு!
மணிப்பூர் மாநிலத்தை மத்திய அரசு இரண்டாக உடைத்துள்ளது என நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் குற்றம் சாட்டியுள்ளார்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விரிவாக விவாதித்து பிரதமர் மோடி விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், குறுகிய கால விவாதம் நடத்த தயார் எனவும், மத்திய உள்துறை அமைச்சர் விளக்கம் அளிப்பார் எனவும் பாஜக அரசு கூறிவருகிறது.
இதனிடையே, ஜூலை 26 ஆம் தேதி மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் அசாம் மாநில எம்.பி.யுமான கவுரவ் கோகாய் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருமாறு நோட்டீஸ் வழங்கினார். அதனை, இந்தியா கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஆதரிப்பதாகத் தெரிவித்தன.
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த மக்களவை, அதன் மீதான விவாதம் இன்றும், நாளையும் நடைபெறும் என தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து பேசுவார் என தெரிகிறது.
அதன்படி, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வந்த கவுரவ் கோகாய், அந்த தீர்மானத்தை மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது, பேசிய அவர், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர நாங்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளோம். இது பலத்தை நிரூபிப்பதற்கான தீர்மானம் அல்ல. இது மணிப்பூருக்கு நீதி வேண்டிய கொண்டுவரப்பட்ட தீர்மானம் என்றார்.
மேலும், பிரதமர் மோடியின் மவுன விரதத்தைக் கலைக்கவே நாங்கள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளோம். மணிப்பூர் மாநிலத்தை மத்திய அரசு இரண்டாக உடைத்து, இரண்டு மணிப்பூர்களை உருவாக்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
மணிப்பூருக்கு சென்று பிரதமர் மோடி இதுவரை ஆய்வு செய்யாதது ஏன்? மணிப்பூர் முதல்வரை பிரதமர் ஏன் இதுவரை பதவி நீக்கம் செய்யவில்லை? மணிப்பூரைப் பற்றி பேசுவதற்கு பிரதமருக்கு கிட்டத்தட்ட 80 நாட்கள் ஏன் தேவைப்பட்டன? அவர் பேசும்போது கூட வெறும் 30 வினாடிகளே பேசினார் என சரமாரியாக கவுரவ் கோகாய் கேள்வி எழுப்பினார்.
மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்துவதில் பிரதமரின் இரட்டை எஞ்சின் அரசு தோல்வி அடைந்துவிட்டது. ஒன்றிய, மாநில அரசுகள் செய்த பணிகளை ஏற்காததால்தான், மணிப்பூரில் கலவரத்தை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்துள்ளது என்றும் மக்களவையில் காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் பேசினார்.
மேலும், மணிப்பூரில் துரதிர்ஷ்டவசமாக 150 உயிர்கள் பலியாகியுள்ளன. சுமார் 5000 குடியிருப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. சுமார் 60,000 பேர் நிவாரண முகாம்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். சுமார் 6500 எஃப்ஐஆர்கள் பதியப்பட்டுள்ளன. இவை மணிப்பூரின் கொடூரமான யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: ராஜ்யசபா எம்.பி., டெரிக் ஓ பிரையன் சஸ்பெண்ட்!
மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் போது, மணிஷ் திவாரி, அதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோரும் பேசுவார்கள் என தெரிகிறது. அதேபோல், தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவு திரும்பப்பெறப்பட்டுள்ளதால், அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டுள்ள ராகுல் காந்தியும் இந்த விவாதத்தின் மீது பேசுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.