நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: ராஜ்யசபா எம்.பி., டெரிக் ஓ பிரையன் சஸ்பெண்ட்!
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., டெரிக் ஓ பிரையன் நாடாளுமன்ற நடப்பு கூட்டதொடரில் மீதமிருக்கும் நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே, மணிப்பூர் வன்முறை தொடர்பாக இரு அவைகளிலும் ஆளும் பாஜக அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விரிவாக விவாதித்து பிரதமர் மோடி விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், குறுகிய கால விவாதம் நடத்த தயார் எனவும், மத்திய உள்துறை அமைச்சர் விளக்கம் அளிப்பார் எனவும் பாஜக அரசு கூறிவருகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை அவைக்கு வரவழைத்து பேச வைக்கும் பொருட்டு, மக்களவையில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இதன் மீதான விவாதம் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., டெரிக் ஓ பிரையன் நாடாளுமன்ற நடப்பு கூட்டதொடரில் மீதமிருக்கும் நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவை நடவடிக்கைகளை சீர்குலைத்ததாக டெரிக் ஓ பிரையனை இந்த கூட்டத்தொடர் முழுவதும் எஞ்சியிருக்கும் நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து ராஜ்யசபா தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெக்தீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார்.
சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்து தொந்தரவு செய்ததற்காகவும், தலைவருக்குக் கீழ்ப்படியாததற்காகவும் டெரிக் ஓ பிரையனை இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்வைத்தார். அதனையேற்று, டெரிக் ஓ பிரையன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: இன்று தொடங்குகிறது விவாதம்!
கடந்த சில நாட்களுக்கும் முன்பு, மணிப்பூர் நிலமை குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் பதிலைக் கோரிய திரிணாமூல் எம்.பி., டெரிக்-ஓ-ப்ரைன் பேசியவற்றை அவைக்குறிப்பில் இருந்து மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தன்கர் நீக்கினார். ஆனால், தனது வார்த்தைகளில் என்ன தவறு உள்ளது எனவும், அவைக்கு பொருந்தாத வார்த்தைகள் என்ன உள்ளது எனவும் கேள்வி எழுப்பிய டெரிக்-ஓ-ப்ரைன், அவரது வார்த்தைகளை நீக்கியது தொடர்பாக ஒழுங்குப் பிரச்சினையை எழுப்ப முயன்று அமளியில் ஈடுபட்டது நினைவிருக்கலாம்.
முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.