மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: இன்று தொடங்குகிறது விவாதம்!

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று தொடங்கவுள்ளது

No Confidence Motion against bjp government Debate Today

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் 31 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. அதேசமயம், நாடு எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இதனிடையே, கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள், கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விரிவாக விவாதித்து பிரதமர் மோடி விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அதாவது, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விதி எண் 267இன் கீழ் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றனர். ஆனால், 176இன் கீழ் குறுகிய கால விவாதம் நடத்த தயார் எனவும், மத்திய உள்துறை அமைச்சர் விளக்கம் அளிப்பார் எனவும் பாஜக அரசு கூறிவருகிறது. பிரதமர் மோடி விளக்கம் அளிக்க மாட்டார் என்பதில் ஆளும் பாஜக அரசு உறுதியாக உள்ளது.

இதனிடையே, ஜூலை 26 ஆம் தேதி மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் அசாம் மாநில எம்.பி.யுமான கவுரவ் கோகோய் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருமாறு நோட்டீஸ் வழங்கினார். அதனை, இந்தியா கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஆதரிப்பதாகத் தெரிவித்தன. அதனை விவாதத்துக்கு ஏற்றுக் கொண்டதாக அறிவித்த மக்களவை சபாநாயகர்,  ஆகஸ்ட் 8ஆம் தேதி (இன்று) முதல் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் என்று அறிவித்தார்.

டெல்லி அவசரச் சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேறியது!

அதன்படி, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று தொடங்கவுள்ளது. இன்றும், நாளையும் தொடர் விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தின் மீது ஆகஸ்ட் 10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து பேசுவார் என தெரிகிறது. அதன்பிறகு, நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறும். பாஜக அரசுக்க்கு பெரும்பான்மை உள்ளதால், இந்த தீர்மானம் கண்டிப்பாக தோல்வியை சந்திக்கும். இது எதிர்க்கட்சிகளுக்கும் தெரியும். ஆனால், மணிப்பூர்  விவகாரத்தில் பேச மறுக்கும் பிரதமர் மோடியை நாடாளுமன்றத்துக்கு வரவழைத்து பேச வைப்பதற்காகவே இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தகுதி நீக்க நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளதால் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றம் வந்துள்ளார். அவர் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதத்தை தொடங்குவார் என தெரிகிறது. அதேசமயம், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவதம் இன்று தொடங்கவுள்ளதால், பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டத்துக்கும் அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 11ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. எனவே, நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் காரணமாக அவை அலுவல் நாட்கள் நீட்டிக்கப்படுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. அதேசமயம், பிரதமர் மோடி 10ஆம் தேதி பதிலளித்து பேசி விடுவதால், அலுவல்கள் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்றே கூறுகிறார்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios