டெல்லி அவசரச் சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேறியது!
டெல்லி அதிகாரத்தை கட்டுப்படுத்தும் சர்ச்சைக்குரிய மசோதாவை மாநிலங்களவையிலும் மத்திய அரசு நிறைவேற்றியது
டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு (திருத்தம்) மசோதாவை 131 எம்.பி.க்களின் ஆதரவுடன் மாநிலங்களவையில் மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.
டெல்லி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் வகையிலான அவசர சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டத்தின்படி துணை நிலை ஆளுநருக்கு மட்டுமே அதிகாரிகளை மாற்றும், நியமிக்கும் அதிகாரம் இருக்கும். டெல்லியில் அதிகார மையத்தை மத்திய அரசு தங்களது கட்டுக்குள் கொண்டு வரும் வகையிலான இந்த சட்டத்தை ஆம் ஆத்மி கடுமையாக எதிர்த்து வருகிறது.
இந்த மசோதாவை எதிர்க்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். அதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால், டெல்லி அவசரச் சட்டத்தை நிரந்தர சட்டமாக்கும் மசோதாவை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற பாஜக முனைப்பு காட்டி வந்தது.
அதன்படி, எதிர்க்கட்சிகளின் பெரும் அமளிக்கு மத்தியில், டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு (திருத்தம்) மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 2ஆம் தேதி மக்களவையில் அமித் ஷா தாக்கல் செய்தார். அந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் கடந்த 3ஆம் தேதி நிறைவேறியது.
இதையடுத்து, அந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், டெல்லி அரசு அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பான அதிகாரத்தை டெல்லி மாநில அரசிடமிருந்து பறிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்தை 131 எம்.பி.க்களின் ஆதரவுடன் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு மக்களவையில் பெரும்பான்மை இருப்பதால் மசோதா எளிதாக நிறைவேறிவிடும் என்பது தெரிந்ததுதான். ஆனால், மாநிலங்களவையில் சிக்கல் எழும் நிலை ஏற்பட்டது. ஆனால், தலா 9 உறுப்பினர்களை கொண்ட பிஜு ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்ததால், மாநிலங்களவையிலும் அந்த மசோதாவை பாஜக எளிதாக நிறைவேற்றியுள்ளது.
மசோதா நிறைவேறியதைத் தொடர்ந்து, இது இந்தியாவின் ஜனநாயகத்திற்கு "கருப்பு நாள்" என்றும், பாஜக தலைமையிலான மத்திய அரசு பின்கதவு வழியாக அதிகாரத்தை அபகரிக்க முயற்சிப்பதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். டெல்லி மக்களை பாஜக முதுகில் குத்துவதாகக் குற்றம் சாட்டிய அவர், இந்த மசோதா மக்களின் வாக்களிக்கும் உரிமையை அவமதிப்பதாகவும் கூறினார்.
முன்னதாக, டெல்லி அவசரச் சட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இருப்பதாக கூறி அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் பிஎஸ் நரசிம்மா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.